ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அண்ணாமலை வெற்றி பெறுவார்: IDPS சர்வே கணிப்பு !

தமிழகத்தில் இதுவரைஇல்லாத அளவிற்கு இந்த முறை கோவை மக்களவைத் தொகுதியில் அமோக ஆதரவுடன், பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றிப்பெறுவார் என லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (IDPS) நடத்திய கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

கோவையில் கருத்துக்கணிப்பு வெளியிடுவதற்கு காவல்துறை கெடுபிடி விதித்தது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைவர்  திருநாவுக்கரசு சாலையில் இறங்கி வந்து பத்திரிகையாளர்கள் முன்பு ,கோவை தொகுதியில் நடத்திய கருத்துக்கணிப்பு நிலவரம் தொடர்பாக பேட்டியளித்தார்.

அப்போது திருநாவுக்கரசு கூறியதாவது:

இன்றை நிலையில் தமிழகத்தில் சாலையில் வந்துதான் சர்வே முடிவுகளை கொடுக்க வேண்டிய நிலைமை உள்ளது. சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் கடந்த 2004ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் IDPS. கிட்டத்தட்ட 48 ஆய்வுகள் இதுவரை வெளியிட்டுள்ளோம். இன்றைக்கு காவல்துறை ஒரு சர்வே வெளியிடக்கூடாது என்று என்னை மிரட்டுகிறது.

தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்றால் 17ம் தேதி வரை சர்வே வெளியிடலாம் என கூறியுள்ளது. அப்படி இருக்கும் சூழலில் தமிழகத்தில் உள்ள கோவை மக்களவைத் தொகுதி தேசிய தலைவர்களால் உற்று நோக்கப்பட்டு வருகிறது.

இந்திய அரசியல் ஜனநாயக நிறுவனம் (IDPS)சார்பில், இந்த தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதற்காக கிட்டத்தட்ட 10 நாட்கள் கோவை தொகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளை இன்று வெளியிட இருந்தோம். அதன் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று காவல்துறை தடுக்கிறது.

இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா அல்லது சர்வாதிகாரி நாட்டில் வாழ்கிறோமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று ஆய்வு முடிவுகளை சாலையில் வந்து கொடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 2004ல் தொடங்கி இன்றுவரை இப்படி ஒரு நிலை வந்ததில்லை. இது சர்வாதிகாரத்தின் ஆட்சியாகவே பார்க்கிறேன்.

 கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் 38.90 சதவீத வாக்குகளையும், திமுக வேட்பாளர் கணபதி 33.40சதவீதமும், 18.5 சதவீதம் அதிமுகவும் எடுக்கும். இன்று சவால்விட்டு சொல்கிறேன் என்னை இன்று மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய காவல்துறைக்கு சொல்ல விரும்புகிறேன். இந்த தேர்தலில் தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் இல்லாத வகையில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவார். அப்படி இல்லை என்றால் எனது நிறுவனத்தை கலைத்துவிட்டு செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top