இந்து அறநிலையத்துறை என்பது அரசு நியமித்த கொள்ளையர்கள்: அணைக்கட்டுவில் தலைவர் அண்ணாமலை!

அதிகாரிகள் கடமையைச் செய்யாமல் சம்பளம் வாங்குவதில் என்ன பயன் என்று நேரடியாகவே அரசிடம் கேள்வி கேட்டது நீதிமன்றம். இந்து சமய அறநிலையத்துறை அறம் இல்லாத துறை. அரசு நியமித்த கொள்ளையர்கள் என வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நேற்று (பிப்ரவரி 04) என் மண் என் மக்கள் யாத்திரையில் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

யாத்திரை நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

நெல் அறுவடைக்கு ஆனை கட்டிப் போரடித்த பெருமைக்குரிய விவசாய பூமியான, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, பெரும் திரளெனக் கூடி ஆதரவளித்த பொதுமக்களால் சிறப்புற்றது. ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோவில், வட தமிழகத்தின் ஸ்ரீரங்கம் என அழைக்கப்படும் ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான பள்ளிகொண்டான் ரங்கநாதர் கோவில் ஆகியவை அமைந்திருக்கும் தொகுதி.

அழிந்து போன நாகநதியை, இந்தப் பகுதியின் 21 கிராமப் பொதுமக்கள் கூடி மீட்டெடுத்ததைப் பற்றிப் பெருமையாக நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். இம்மண்ணின் பெருமையையும், மக்களின் பெருமையையும், இந்தியா முழுவதிற்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

இங்குள்ள இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு வேண்டும் என்ற கோரிக்கையை, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள், கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டு நிறைவேற்றினார். ஒடுகத்தூர் பகுதியில், 1000 ஏக்கருக்கு மேல் கொய்யா சாகுபடி நடக்கிறது. நாள் ஒன்றுக்கு 1000 டன் கொய்யாப் பழங்கள், விற்பனைக்குச் செல்கிறது. ஒடுகத்தூர் கொய்யாப்பழத்திற்கு புவிசார் குறியீடு வேண்டும் என்ற கோரிக்கையை, நிறைவேற்ற தமிழக பாஜக தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இந்துசமய அறநிலையத்துறை செயல்பாடுகளை, மாண்புமிகு நீதிமன்றங்களே விமர்சனம் செய்துள்ளன. நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, ‘இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி இல்லை எனவும், அறநிலைய அதிகாரிகளுக்கு நல்ல சம்பளம் வழங்கினாலும் பணி செய்வதில் மெத்தனமாக உள்ளதாக நீதியரசர் குறிப்பிட்டுள்ளார். கடந்த  2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், ‘தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பொறுப்பை நீதிபதி ஒருவரிடம் கொடுத்துப் பாருங்கள் தமிழ்நாடு கோவில்களில் ஏற்படும் மாற்றங்களை ஒரு மாதத்தில் பார்க்க முடியும்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம், ‘கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளைத் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது’ என்று கடுமையாக விமர்சித்தது மாண்புமிகு நீதிமன்றம். கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அதிகாரிகள் கடமையைச் செய்யாமல் சம்பளம் வாங்குவதில் என்ன பயன் என்று நேரடியாகவே அரசிடம் கேள்வி கேட்டது நீதிமன்றம். இந்து சமய அறநிலையத்துறை அறம் இல்லாத துறை. அரசு நியமித்த கொள்ளையர்கள்.

திமுக ஆட்சியில் சிறப்பாக நடைபெறுவது மணல் கொள்ளை மட்டும்தான் என்பது ஊரறிந்த உண்மை. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பங்காளிக் கட்சி, சமீபத்தில் அணைக்கட்டில் மணல் கொள்ளை சம்மந்தமாக போராட்டம் நடத்தினார்கள். உடனே, திமுக, அவர்கள் மீது அணைக்கட்டு ஒன்றியம் கரடிகுடி ஊராட்சியில் கடந்த ஆட்சியில், சட்ட விரோதமாக கல் குவாரியில் கிராவல் மண், மண் கடத்தல் மற்றும் அங்காள பரமேஸ்வரி கோயில் இடத்திலும் பல கோடி ரூபாய்க்கு கிராவல் மண் கற்களை திருடி விற்பனை செய்ததால் 200 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என எதிர் குற்றசாட்டு வைத்தது.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது. இவர்கள் அவர்களை குற்றம் சொல்வார்கள். அவர்கள் இவர்களை குற்றம் சொல்வார்கள். இயற்கை வளங்களை சுரண்டி சுரண்டி கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் பாதி பகுதிகளை வறண்ட பூமியாக மாற்றியதே பங்காளிகளின் சாதனை. இவர்கள் இருவரும் பங்காளிக் கட்சி. நான் பகையாளியாம். மக்களுக்காக குரல் கொடுப்பதால் என்னை பகையாளி என்று அழைக்கிறார்கள். அதை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 35 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் அரசுப் பணிக்கான தேர்வு எழுதி, காத்துக் கொண்டிருக்கின்றனர். ஐந்து ஆண்டுகளில் மூன்றரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை என்று வாக்குறுதி கொடுத்த திமுக, 31 மாதங்கள் முடிவில் வெறும் 10000 பேருக்கு மட்டுமே அரசுப் பணி கொடுத்திருக்கிறது.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, தங்கள் தலைமுறையில் இதுவரை யாரும் அரசுப் பணியில் சேர வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். உலகத் தரம் வாய்ந்த அரசுப் பள்ளிகள் தமிழகத்தில் உருவாக்கப்படும் அந்தப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தாய்மொழி உட்பட ஐந்து மொழிகள் கற்றுக் கொள்ள வழி செய்யப்படும். தமிழகத்தில் வளர்ச்சியைக் கொண்டு வரவேண்டியது பாஜகவின் கடமை. தமிழக அரசியலில் அழுக்குகளை அகற்ற, தமிழகம் முழுவதும் தாமரை மலர வேண்டும்.

அதன் முதல்படியாக, வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, இம்முறை தமிழகமும் துணை நிற்க வேண்டும். நம் குழந்தைகள் எதிர்காலத்துக்காக, ஊழல் குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top