அபுதாபி: மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட ஹிந்து கோவிலை பிப்ரவரி 14ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் மிக பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற பிப்ரவரி 14ல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமீரகத்திற்கு முதல் முறையாக வருகை புரிந்தார். அப்போது அமீரகத்தில் வசிக்கும் பாரத நாட்டின் ஹிந்து மக்களுக்காக நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடியில் (5.5 ஹெக்டேர்) இடம் அபுதாபி அரசு சார்பில் ஹிந்து கோவில் கட்ட ஒதுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அன்றைய அபுதாபி பட்டத்து இளவரசராக பொறுப்பு வகித்த தற்போதைய அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார்.

இந்த அபுதாபி ஹிந்து கோவில் கட்டுமான பணிகள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த பாப்ஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டது. இந்த அமைப்பு இந்தியா உள்பட இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் மொத்தம் 1,200 கோவில்களை கட்டி நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து அபுதாபிக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடி, பாப்ஸ் அமைப்பின் நிர்வாகிகளை சந்தித்து கோவில் கட்டுமான திட்டங்கள் பற்றி கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி அபுதாபியில் இந்து கோவில் அடிக்கல் நாட்டு விழாவை, பிரதமர் மோடி துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் துபாய் ஒபெரா ஹவுஸ் அரங்கத்தில் நடைபெற்ற இந்தியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கோவில் மாதிரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்திய பாரம்பரிய முறைப்படி கோவில் கட்ட திட்டமிடப்பட்டு இருந்ததால் இந்தியாவில் இருந்து கைதேர்ந்த 3 ஆயிரம் சிற்பக்கலைஞர்கள் அபுதாபிக்கு வரவழைக்கப்பட்டு மும்முரமாக நடந்து வந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த கோவில் தரைத்தளத்துடன் சேர்த்து 2 தளங்களாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் கோவிலின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து வருகிற 14-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவிலை திறந்து வைத்து கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார். அன்றைய தினம் சிலைகளுக்கு பிரதிஷ்டை செய்யும் விழாவும் நடைபெறுகிறது. தொடர்ந்து பிப்ரவரி 18ஆம் தேதி முதல் கோவில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கோவில் திறப்பிற்கு முன்னதாக பிப்ரவரி 13-ஆம் தேதி அபுதாபியில் இந்திய மக்களை சந்தித்து உரையாற்றுகிறார். இதுவரையில் 60,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top