கோவில்களில் இந்து அறநிலையத்துறை கொள்ளையடிக்கிறது: அண்ணாமலை!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கோவில்கள் தாக்கப்படுவதும், கோவில் சொத்துக்கள் கொள்ளையடிப்பதும் அதிகரித்துள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்றைய என் மண் என் மக்கள் பயணம், தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்களில் முதல் தலமான, எம்பெருமான் அவிநாசியப்பர் காத்து வரும் அவிநாசியில் இனிதே நடந்தேறியது. மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு பியூஷ்கோயல் அவர்கள், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் அண்ணன் திரு எல்.முருகன் அவர்கள் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அக்கா திருமதி வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அவிநாசி என்றால் அழிக்க முடியாதது என்று பொருள். சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் அவிநாசி ஈஸ்வரரைப் போற்றி சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் பாடிய தலம் இது. காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும்.

திமுக ஆட்சிக்கு வந்த பின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகள் புண்படுத்தப்படுவதும்  தொடர்கிறது. கோவில்களில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையே கொள்ளை அடிக்கிறது. இதைத் தான் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் சமீபத்தில் சுட்டிக்காட்டிப் பேசினார்.

கோவிலையும், கோவிலின் சொத்துக்களையும் பாதுகாக்க துப்பில்லாத அரசுக்கு கோவிலில் என்ன வேலை? 

மாண்புமிகு  நரேந்திர மோடி அவர்கள் பிரதமர் ஆனபிறகு, கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 361 சிலைகள் மற்றும் பழங்கால பொக்கிஷங்கள் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன.

தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் விவசாயத்திற்கான பாசன மேம்பாட்டிற்காக நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழங்கிய நிதி 2962 கோடி ரூபாய். அத்திக்கடவு அவிநாசி திட்டம், 65 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் 2019 பிப்ரவரி 28 ல் 1652 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது..

தமிழக நெசவாளர்களுக்கு திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான, நெசவாளர்களுக்குத் தனி கூட்டுறவு வங்கி, விசைத்தறி நெசவாளர்களிடம் இருந்து அரசுப் பள்ளி சீருடை கொள்முதல், அரசு நூல் கொள்முதல் நிலையம், அதுமட்டுமல்லாது, திருப்பூர் மாவட்டத்திற்கு திமுக கொடுத்த வாக்குறுதிகள் அப்படியே உள்ளன. 

நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் ஒரே சமயத்தில் தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் வழங்கியுள்ளார். அதில் ஒன்று திருப்பூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 28,323 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 3,65,331 வீடுகளில் குழாயில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளன. 1,66,352 வீடுகளில் இலவச கழிப்பறைகள் வழங்கப்பட்டுள்ளது. 45,344 பேருக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மத்திய அரசு 300 ரூபாய் மானியம் வழங்குகிறது. மற்றவர்களுக்கும் 200 ரூபாய் மானியம் வழங்குகிறது மத்திய அரசு. ஆனால், திமுக சொன்ன 100 ரூபாய் மானியம் இதுவரை வழங்கவில்லை.

5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 1,07,359 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 89,490 விவசாயிகள், கிஸான் நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய் பெறுகிறார்கள். 3850 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி, திருப்பூர் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவிநாசி திருப்பூர் பகுதி அருகில் இருக்கும் செவ்வூர் ரக நிலக்கடலைக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற பாஜக எல்லா முயற்சிகளையும் எடுக்கும்.

வரும் 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், இந்த ஊழல் கூட்டணியைத் தோற்கடித்து, மக்கள் பேராதரவுடன் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமர் ஆவது உறுதி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top