திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப நாட்கள் எண்ணப்படுகின்றன: அண்ணாமலை ஆவேச பேச்சு!

‘‘திமுக அரசை வீட்டுக்கு அனுப்புகின்ற நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன,’’ என அவிநாசியில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக பேசினார்.

மூன்றாம் கட்டமாக பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று (அக்டோபர் 16) காலை துவக்கினார். இந்த நிகழ்ச்சியை மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், எல்.முருகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தேசிய மகளிர் அணித்தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் மற்றும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.

அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: பெண்களின் முதல் ஓட்டு பாஜகவுக்குதான். பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ளார். தமிழகத்தில் அறநிலையத்துறை சிலை திருட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது.

தமிழகத்தில் 1992 முதல், 2017 வரை 25 ஆண்டுகளில், 1,200 சிலைகள் காணாமல் போயின. கடந்த 1976 முதல், 2013 வரை, மொத்தமாக, இந்தியாவிற்கு வெறும் 13 சிலைகள் மட்டுமே மீட்டுக் கொண்டுவரப்பட்டன.

ஆனால், கடந்த 2014ல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் ஒன்பது ஆண்டுகளில் இதுவரை 361 சிலைகள் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. அதில் 50க்கும் மேற்பட்ட சிலைகள் தமிழகத்தைச் சேர்ந்தவை.

அறநிலையத்துறையின் தகவல்படி 1985ல் 5.25 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் உள்ளன. 2023 கணக்குபடி 3.25 லட்சம் ஏக்கர் தான் உள்ளது. 40 ஆண்டுகளில் அறநிலையத் துறைக்கு சொந்தமான 2 லட்சம் ஏக்கர் நிலம் மாயமாகியுள்ளது. வரும் 2024 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவீர்கள் என நம்புகிறோம். திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top