ஜி20 உச்சி மாநாடு கோலாகலமாக தொடக்கம்: டெல்லியில் குழுமிய உலகத் தலைவர்கள்!

இன்றும் (செப்டம்பர் 9, 10) நாளையும் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் நமது பாரத தேசத்தின் தலைநகரமான டெல்லியில் குழுமியுள்ளனர்.

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளை பார்ப்போம்:

ஜி-20 அமைப்பில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க வருகை புரிந்தனர். அவர்கள் மட்டுமின்றி வங்காளதேசம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்தை சேர்ந்த நாடுகள் உட்பட ஏராளமான நாடுகளின் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். மேலும் ஐநா உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

கடந்த ஆண்டு (டிசம்பர் 2022) ஜி20 தலைமை பொறுப்பை ஏற்ற பாரதம்:

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய 20 நாடுகளின் குழுவான ஜி-20 அமைப்புக்கு நமது பாரத தேசம் கடந்த ஆண்டு டிசம்பர் 1, 2022 அன்று தலைமை பொறுப்பை ஏற்றது. தேசத்தின் தூதரக உறவுகள் வரலாற்றில் இது ஒரு சிறப்புமிக்க தருணம் ஆகும். நிலையான வளர்ச்சி இலக்குகள், பருவநிலை செயல்பாடு, உணவுப் பாதுகாப்பு, பொது சுகாதார அமைப்பு முறைகள், டிஜிட்டல் மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் பற்றி விவாதிக்கும் முன்னணி தளமாகவும், வலுவான அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகவும் ஜி-20 செயல்பட்டு வருகிறது. கடந்த 1999ம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது ஜி20 அமைப்பின் தலைவர் என்ற வகையில் வளர்ந்து வரும் நாடுகளின் நலன்களை பாதுக்கும் பிரதிநிதியாக செயல்படும் வாய்ப்பை பாரதம் பெற்றுள்ளது.

உலகத்திற்கே வழிகாட்டும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவம்:
நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு நமது பாரத தேசத்தின் பிரதமராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் இரவு, பகலாக மக்கள் நலனை மட்டும் குறிக்கோளாக கொண்டு பணியாற்றி வந்தார். இதனால் உலகம் முழுவதும் நமது தேசத்தின் மதிப்பு மற்றும் பொருளாதாரம் பல மடங்கு உயர்ந்தது. எந்த நாட்டில் பிரச்னை மற்றும் போர் என்றாலும் பிரதமர் நரேந்திர மோடியை அழையுங்கள் அவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உலக நாடுகளிடம் ஏற்பட்டது.

உலக நாடுகளின் கூட்டணியை உருவாக்குவதில் செழுமையான வரலாறும் உலகிலேயே இளைஞர்களை அதிகம் கொண்ட நாடாகவும் திகழும் பாரதம், உலகின் சிறந்த நடைமுறைகளை கடைபிடித்து உடனடி தீர்வு காண வேண்டிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க உறுதி பூண்டது. இதன் காரணமாகவே இன்று (செப்டம்பர் 9) நடைபெறும் உச்சி மாநாட்டில் இதுவரை இல்லாத வகையில் சுமார் 43 தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

டெல்லியில் அலங்கரிக்கப்பட்ட புகழ்பெற்ற கட்டிடங்கள்:
சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜும்மா பள்ளிவாசலில், ஜி-20 உச்சி மாநாட்டை வரவேற்கும் விதமாக வண்ணமயமான மலர்கள் மற்றும் விளக்குகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

ஜி-20 மாநாட்டு மண்டபத்தில் கண்காட்சிகளுக்கு ஏற்பாடு:

தேசத்தின் தொழில்நுட்ப திறனை பிரதிபலிக்கும் ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பாரத தேசத்தின் தொழில்நுட்ப திறன் மற்றும் கைவினை பொருட்கள் திறனை பிரதிபலிப்பதாக இருக்கும்.

டெல்லியில், இன்றும், நாளையும் ஜி-20 மாநாடு நடக்கிறது. ஜி-20 அமைப்பில் இடம்பெற்றுள்ள 20 நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட 9 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அங்கு ஏராளமான கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் கண்டுகளிக்கலாம். ‘கலாசார வழித்தடம்- ஜி20 டிஜிட்டல் அருங்காட்சியகம்’ என்ற ஒரு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஜி-20 நாடுகளின் பாரம்பரியம் மற்றும் கலாசார பெருமையை பறைசாற்றும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

தொழில்நுட்ப திட்டங்கள் பாரத் மண்டபத்தின் 4 மற்றும் 14-ம் எண் அறைகளில், ‘டிஜிட்டல் இந்தியா அனுபவ மண்டலம்’ என்ற கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தேசத்தில் உள்ள தொழில்நுட்ப திட்டங்களின் அனுபவத்தை பார்வையாளர்கள் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கியமான முன்முயற்சிகள், ஆதார், டிஜிலாக்கர், யு.பி.ஐ., இசஞ்சீவானி, திக்ஷா, பாஷினி, ஓ.என்.டி.சி., ஆஸ்க் கீதா ஆகிய திட்டங்களின் சிறப்பம்சங்கள் அதில் விளக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட ‘கோவின்’ இணையதளம் மற்றும் ஜன்தன், இ-நாம், ஜி.எஸ்.டி.என், பாஸ்டேக் போன்ற முக்கியமான தொழில்நுட்ப திறன்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பணம், யு.பி.ஐ. ஒன் வேர்ல்டு, ருபே உள்ளிட்ட திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. பாரத தேசத்திற்கு வரும் வெளிநாட்டினர், நாட்டில் வங்கி கணக்கு இல்லாதபட்சத்தில், பண பரிமாற்றத்துக்காக, ‘யு.பி.ஐ. ஒன் வேர்ல்டு’ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

‘கைவினை பொருள் பஜார்’ என்ற கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஒரு மாவட்டம், ஒரு பொருள்’ என்ற தலைப்பில் நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த கைவினை பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சுமார் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தயாரிப்புகள், கதர் கிராம தொழில் ஆணையம் போன்ற மத்திய அமைப்புகளின் தயாரிப்புகளை அதில் பார்க்கலாம். ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள், உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதற்காக இந்த கைவினை பொருள் பஜார் அமைக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு மொழிகளில்… வருக, வருக:

‘வசுதைவ குடும்பகம்’ என்பதும் ஜி-20 நாடுகளின் மொழிகளில் ஆங்காங்கே வரவேற்பு பலகைகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் ஜெர்மன் முதல் ஸ்பானிஷ் வரையிலான பல மொழி பலகைகளை தலைநகரில் காணமுடிகிறது.

மாமல்லபுரம் சிற்பங்கள் மாநாட்டு மைதானத்தில் தேசத்தின் பாரம்பரியத்தை உலக நாடுகள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு மாநிலங்களின் கண்காட்சி அரங்குகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் தமிழகத்தின் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பிலும் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் பலவகை கைத்தறி துணி வகைகள், பல்வேறு தொன்மைப் பொருட்கள், மாமல்லபுரம் கல் சிற்பங்கள், கள்ளக்குறிச்சி மரவேலைப்பாட்டு பொருட்கள், நாச்சியார் கோவில் பித்தளை விளக்குகள், தஞ்சாவூர் பொம்மை, கலை தட்டுக்கள், ஓவியங்கள், பத்தமடை பாய்கள், வடசேரி கோவில் நகைகள் மற்றும் மயிலாடி கல் பொருட்கள் போன்றவை இடம்பெற்று உள்ளன.

ஜனாதிபதி திரௌபதி முர்மு அளிக்கும் விருந்து:

ஜனாதிபதி விருந்தில் இடம்பெறும் உணவு பதார்த்தங்கள் ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருந்து அளிக்கிறார். விருந்தில், பாரத தேசத்தில் மழைக்காலத்தில் சாப்பிடும் உணவு பண்டங்களை மனதில் வைத்து, விசேஷமான உணவு தயாரிக்கப்படும். சிறுதானிய உணவு வகைகளும் இடம்பெறும். குலோப் ஜாமுன், ரசமலாய், ஜிலேபி போன்ற இனிப்புவகைகளும் பரிமாறப்படும். வெளிநாட்டு பிரதிநிதிகள் மறக்க முடியாத சுவையுடன் செல்லும்வகையில், உணவுவகைகள் இருக்கும். உணவு வகைகள் அனைத்தும் வெள்ளி, தங்கம் உள்ளிட்ட பாத்திரங்களில் பரிமாறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு
-வ.தங்கவேல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top