கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்க திமுக அரசு அனுமதி வழங்கவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சுமார் 100 கேந்திர வித்யாலயா பள்ளிகள் தேவை. ஆனால் துவக்குவதற்கு அனுமதியும் அதற்கான நிலத்தையும் திமுக அரசு தரவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

என் மண் என் மக்கள் யாத்திரை இரண்டாம் கட்ட பிரச்சாரம் நேற்று (செப்டம்பர் 8) தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. அதன்படி கடமலைக்குண்டு ஆத்தங்கரைபட்டியில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வரும் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை பார்க்க வந்துள்ளோம். மோடி பிரதமரான பின்தான் தனி மனிதனுக்கான திட்டம் கொண்டு வரப்பட்டது. மோடி மட்டுமே கிராமத்தில் உள்ளவர்களை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்.

சமையல் காஸ் இணைப்பு, வங்கி கணக்கு இல்லாமல் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கிடைப்பதறகான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சுமார் 42 கோடி புதிய வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. நலத் திட்டங்களுக்கு செலவு செய்யும் பணத்தில் 88 சதவீதம் மத்திய அரசு வழங்குகிறது. 66 சதவீத மக்களின் வீடுகளுக்கு குடிநீர் கிடைத்துள்ளது. கிராமங்களில் அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெற்று முன்னேற்றம் அடைவதை பார்ப்பதற்கான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. விரைவில் 6 லட்சம் ஊராட்சிகளுக்கு 5ஜி இணையசேவை கிடைக்கப்போகிறது.

விவசாயிகளின் நலனை கொண்டு உர மானியமாக ஹெக்டேருக்கு 9000 ரூபாய் வரை மத்திய அரசு வழங்குகிறது. புதிய தொழில் துவங்குவதற்கும், தொழிலை நவீனப்படுத்தவும் மத்திய அரசின் வாயிலாக மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் உள்ளது. அதனை அனைவரும் பயன்படுத்துங்கள்.

அதே போல மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளி வாயிலாக தரமான இலவச கல்வி வழங்க முடியும். எனவே தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேவைப்பட உள்ளது. ஆனால் அதற்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கான இடத்தையும் ஒதுக்கித்தரவில்லை. இந்த நல்லத்திட்டம் தமிழக மக்களுக்கு கிடைக்காமல் போகிறது.

மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடிக்கு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஆதரவை வழங்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top