தவறான சிகிச்சையால் பறி போன கால்.. திமுக அரசுக்கு எதிராக போலீஸ் தனது மகளுடன் தர்ணா!

தவறான சிகிச்சையால் தனது மகளுக்கு கால் நடக்க முடியாதபடி அழுக ஆரம்பித்ததாக கூறி சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு ஏட்டு ஒருவர், மகளுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், மகளை சிகிச்சைக்காக   சேர்த்துள்ளார் காவல்துறை ஏட்டு ஒருவர்.  ஆனால், மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுமியின் வலது கால் அழுக ஆரம்பித்துள்ளது.. சில நாட்களில் அதை அகற்ற வேண்டிய நிலைமையும் வந்துவிட்டது.

சிறுநீரக பிரச்னை என்று போனால், குழந்தைக்கு கால் போய்விட்டதே என்று கொந்தளித்துப் போனார் ஏட்டு. இது குறித்து மருத்துவமனை நிர்வாகித்திடமும் கேள்வி எழுப்பினார்.. ஆனால், அவருக்கு எந்தவிதமான பதிலையும் நிர்வாகம் தரப்பில் கூறவில்லை.. இப்படியே மாதங்களும் கடந்து போனது. இதனால் மேலும் நொந்துபோன ஏட்டு கோதண்டபாணி, தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்தார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம், சட்டசபையில் பட்ஜெட் சமயத்தில் இந்த தர்ணாவை கையில் எடுத்தார்.

அப்போது தலைமைச் செயலகம் முன்பு, தனது மகளுடன் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். அப்போது அனைவரின் கவனமும் ஏட்டு மீது இருந்தது. இதனால் பதறிப்போன திமுக அரசு உடனடியாக உப்புக்கு சப்பாக ஒரு குழு அமைப்பதாக உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவோடு சரி, எந்தக் குழுவும் கடைசிவரை அமைக்கப்பட வில்லையாம்.

ஏற்கனவே மனநிம்மதி இல்லாமல் இருந்த கோதண்டபாணி, இப்போது மேலும் விரக்திக்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து, இன்று (ஆகஸ்ட் 15) மதியம் மறுபடியும் தர்ணாவில் ஈடுபட்டார். தனது மகளுடன் டிஜிபி அலுவலகத்திற்கு வந்த அவர், சாலையிலேயே அமர்ந்து தர்ணா செய்தார். இதனால், மறுபடியும் பரபரப்பு அங்கு ஏற்பட்டது.

 அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏட்டு கோதண்டபாணி, ‘‘இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 77-வது ஆண்டை கொண்டாடிட்டு இருக்கோம். ஆனால் எனது மகளுக்காக 2 ஆண்டுகளாக போராடிட்டு இருக்கேன்.. இதுவரையில் நீதி கிடைக்கவில்லை.. குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு சொன்னது.. ஆனால், குழுவும் அமைக்கப்படவில்லை..

இதற்கிடையில் தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு 4 மாதங்களுக்கு பிறகு இப்போது அவருடைய மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குவதாக குழந்தைகள் நல ஆணையம் சொல்கிறது.

ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்தது பற்றி, எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை. அந்த விளக்கம்தான் தனக்கு வேண்டுமே தவிர மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் தங்களுக்கு தேவையில்லை. என் குழந்தைக்கு மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ் தருவதாகவும், பென்ஷன் தருவதாகவும் சொல்வதில் என்ன நியாயம்? குழந்தையை மாற்றுத்திறனாளியாக மாற்றிவிட்டு, அதற்கான சான்றிதழ் தருவதாக சொல்வது சரியா?  என்னுடைய குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.. இல்லாவிட்டால், என்னையும், என் மகளையும் கருணை கொலை செய்துவிடுங்கள்.. அதுவரை போராட்டம் நடத்தி கொண்டேதான் இருப்பேன் என கண்ணீருடன் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top