ஆசிய வாள்வீச்சில் வரலாறு படைத்த ஆற்றல்மிகு வீராங்கனை பவானி தேவி!

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுத்துள்ள பாரதம், விளையாட்டுத் துறையில் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது. இவ்வேளையில், காரிருள் இடையே பளிச்சிடும் வெளிச்சக் கீற்றுகளாக பாரதியர்கள் சிலர் அபார சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். அவர்களை மேலும் ஊக்கப்படுத்த வேண்டியது நமது கடமை. இதன் வாயிலாக எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் மேலும் பலர் பிரகாசிக்க முடியும் என்பது திண்ணம்.

அண்மையில் சீனாவில் உள்ள வுக்ஸி நகரில் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் மகளிருக்கான சேபர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் நம் பாரதத்தைச் சேர்ந்த சி.ஏ.பவானி தேவி, உஸ்பெஸ்கிஸ்தானின் ஜெய்னாப் தயிபெகோவாவுடன் மோதினார். இருவருக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போட்டியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை பவானி தேவி இழந்தார். ஜெய்னாப் தயிபெகோவாவும் பவானி தேவியும் முறையே 15 மற்றும் 14 என புள்ளிகளை ஈட்டியிருந்தனர். பவானி தேவி வெற்றியை நழுவ விட்டுவிட்டாலும் அவரது முயற்சியை  பாராட்ட  நாம் தவறக் கூடாது.

அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பவானி தேவி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதலாவது பாரத வீராங்கனை பவானி தேவி, எதிர்காலத்தில் மேலும் எண்ணற்ற சாதனைகளைப் படைப்பார் என்பதற்கு இது அச்சாரமாக அமைந்துள்ளது என்றால் மிகையன்று.

முன்னதாக நடைபெற்ற கால் இறுதிச் சுற்றில் பவானி தேவி, உலக சாம்பியனான ஜப்பானின் மிசாகி எமுராவை 15-10 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து அனைவரினை ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார்.

2022-ம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் மிசாகி எமுரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். கடந்த காலங்களில் மிசாகி எமுராவுக்கு எதிராக களமிறங்கிய போட்டிகளில் எல்லாம் பவானி தேவி தோல்வியையே தழுவினார். இப்போது தான் முதல்முறையாக  மிசாகி எமுராவை பவானி தேவி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிய குடும்பத்தில் பிறந்து எழுச்சி முகட்டை நோக்கி பயணித்து வரும் பவானி தேவி மற்ற விளையாட்டு வீரர்களுக்கு தலைசிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார். அவர் 1993-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி அனந்த சுந்தரராமன்-ரமணி தம்பதியினரின் மகளாக பிறந்தார். அனந்த சுந்தரராமன் ஆலயப் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளார். ரமணி இல்லத்தரசியாக உள்ளார். பவானி தேவிக்கு 2 சகோதரர்களும், 2 சகோதரிகளும் உள்ளனர். பள்ளிக்கூடத்தில் 6 விளையாட்டுகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது மற்ற விளையாட்டுகளுக்கு உரிய இடங்கள் நிரம்பிவிட்ட நிலையில் வாள்வீச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு பவானி தேவி தள்ளப்பட்டார். எனினும் அதில் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட்டதால் படிப்படியாக அவர் உயர்ந்தார்.

2004-ம் ஆண்டிலேயே வாள்வீச்சில் பவானி தேவி முனைப்புடன் ஈடுபட தொடங்கிவிட்டார். வாள்வீச்சு என்பது நமது பாரம்பரியத்தோடு பின்னிப்பிணைந்தது என்ற போதிலும் நிகழ்காலத்தில் அதற்கு குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவுக்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பவானி தேவி பெற்றுள்ள வெற்றி வாள்வீச்சுக்கு மேலும் முக்கியத்துவம் கிடைக்க வழிவகை செய்யும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. விளையாட்டில் பவானிதேவி அடுத்தடுத்து சாதனைகளை படைத்தப் போதிலும் படிப்பிலும் அவர் தொடர்ந்து சாதனை படைத்தார். கேரளாவில் உள்ள தளிச்சேரி பிரன்னன் கல்லூரியில் அவர் பி.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளார். சென்னை ஜோசப் கல்லூரியில் அவர் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளார். 2017-ம் ஆண்டு ஐஸ்லாந்தில் உள்ள  ரிக்ஜாவிக் நகரில் நடைபெற்ற போட்டியில் பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார். அவர்  காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பாரதத்துக்கு பெருமை சேர்த்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி நெஞ்சாரப் பாராட்டினார். இப்போது சீனாவில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள பவானி தேவியை மத்திய விளையாட்டுத் துறை அனுராக் தாக்கூர் ,பாரத வாள்வீச்சு சங்க பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா உள்ளிட்டோர் பாராட்டி உள்ளனர்.

“வாள்வீச்சில் நான் ஈடுபடுவதற்கும், தொடர்ந்து சாதனை படைத்து வருவதற்கும் ஊக்கமளித்து வருபவர் எனது தாயார்தான். எனது தந்தை, சகோதரிகள் மற்றும் சகோதரர்களும் எனக்கு உறுதுணையாக உள்ளனர். ஜப்பானைச் சேர்ந்த மிசாகி எமுராவை வீழ்த்தியது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறேன். அவரை வீழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. தொடக்கத்தில் வாள்வீச்சு பயிற்சியில் ஈடுபட என்னிடம் வாள் இல்லை. மூங்கில் கம்பை பயன்படுத்தியே பயிற்சியை மேற்கொண்டேன். இந்த அளவுக்கு நான் உயர்ந்துள்ளதை இறைவனின் அருளாகவே கருதுகிறேன். பாரத மக்களின் ஆதரவுடன் எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைப்பேன் என உறுதியாக நம்புகிறேன்” என்று பவானி தேவி மன உணர்வுகளைக் கொட்டியுள்ளார்.

வீரியம் விரைவு வித்தகம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செம்மையான வியூகம் வகுத்து பவானி தேவி இயங்கி வருகிறார். வாள்வீச்சில் வாகைசூடிய பவானி தேவி சர்வதேச அரங்கில் பாரதத்தில் பெருமையை மேலும் மேலும் உயர்த்துவார் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்துள்ள நம்பிக்கை எதிர்காலத்தில் நிச்சயமாக நனவாகும்.

-ஆர். பி.எம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top