மீண்டும் மேகதாது!

மேகதாது அணை விவகாரம் இப்பொழுது விஸ்வரூபமாக உயிர் பெற்று எழுந்து, தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் ஒரு முள்ளாக உருவெடுத்திருக்கிறது.  பல ஆண்டுகளாகவே இந்த பிரச்சினையை கர்நாடகா எழுப்பி வந்த போதும் மத்தியில் இருக்கும் பாஜக அதற்கு இடம் கொடுக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், இப்போது கூட்டணி கட்சிகளான திமுகவும் காங்கிரஸும் எதிரும் புதிருமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை மேகதாது அணை விவகாரம் ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு மக்களாகிய நாம் திமுகவை நம்புவது என்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல தான்.  ஏனென்றால் காவேரி பிரச்னையில் நம்மைத் தொடர்ந்து வஞ்சித்து வந்த ஓர் அரசியல் கட்சி என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான்.  தமிழக உரிமை, தமிழர் நலன் என்று வாய் கிழிய பேசி, மக்களை முட்டாளாக்கி, வாக்குகளையும் சேகரித்து, ஆட்சியிலும் பல ஆண்டுகளாக தொடர்ந்து அமர்ந்து கொண்டு வருகிற திமுக தான்,  நூறாண்டுகளுக்கு மேல் இருந்த ஒப்பந்தங்களை முறியடித்து கர்நாடகாவுக்கு அணைக்கட்ட அனுமதித்தது.  இந்த விஷயங்களுக்காக கருணாநிதியை தமிழ்நாடு என்றென்றும் மன்னிக்க முடியாது.  ஆனால் எப்படியோ இந்த விஷயம் மழுங்கடிக்கப்பட்டு,  மறக்கடிக்கப்பட்டு திமுக மீண்டும் மீண்டும் பதவியில் இருந்து கொண்டிருக்கிறது.   திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு முக்கியமான வாக்கு வங்கியாகவும் என்றைக்கும் அதற்கு தேவையான சட்டசபை இடங்களை பெற்று தருவதுமான டெல்டா மாவட்டம், இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியும் – திராவிட ஆட்சி வந்த பிறகு தான் அந்த மாவட்டமே வறண்டு  போனது என்பது.  காவிரி என்பது கட்டாந்தரையாக, காட்டுச் செடி மண்டலாக, மணல்வெளியாக  வருடத்தில் ஒன்பது மாதங்கள் இருக்க வேண்டிய நிலை வந்தது.  இந்த நிலைக்கு காரணமே கர்நாடகாவில் பல அணைகளை அந்த அரசு கட்டியதும் அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல், தடுத்து நிறுத்தாமல் ஆதரவு தெரிவித்ததுமான திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.

இதனாலே நாம் மேகதாது விஷயத்தைப் பார்த்தோம் என்றால்  மீண்டும் மற்றொரு ஏமாற்றம் வந்துவிடுமோ என்ற அச்சம் நமக்கு ஏற்படுகிறது.  இந்த விவகாரத்தில் மாநில பாரதிய ஜனதா கட்சி ஆரம்பத்திலிருந்து கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறது. சென்ற ஆண்டு இந்த பிரச்சனை தலை தூக்கிய பொழுது நமது மாநில தலைவர் கே அண்ணாமலை இதற்காக தஞ்சாவூரில் மிகப்பெரிய உண்ணாவிரதத்தை நடத்தினார்.  பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் அமைச்சராக இருந்தபோது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒவ்வொரு நிலையிலும் தமிழக பாஜக இதனை எதிர்த்தே வந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி எந்த அளவுக்கு இந்த விஷயத்தில் தீவிரமாக தமிழ்நாடு மக்களுக்கு சார்பாக இருக்கிறது என்பது இவற்றின் மூலமாக நாம் அறியலாம்.  அதே நேரத்தில் கர்நாடகாவிலும் காங்கிரஸ் அரசு இதில் காட்டும் தீவிரம் அச்சத்துக்குரியதாக இருக்கிறது. ஏனென்றால் மேகதாது அணை பற்றிய வரலாற்றை நாம் பார்த்தோமானால் நமக்கு இந்த விஷயங்கள் புலப்படுகின்றன.

மேகதாது என்பது தமிழ்நாட்டுக்குள் காவிரி பிரவேசிக்கும் ஒகேனக்கல் என்ற இடத்திலிருந்து 15 கிலோமீட்டர் கர்நாடகாவுக்கு உள்ளே இருக்கிறது.  இதன் காரணமாகவே இந்த அணை ஏற்படுவது தமிழ்நாட்டுக்கு படு பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தமிழக மக்களால், அதிகாரிகளால், அரசியலாளர்களால், வல்லுநர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இந்த இடத்தில் காவிரி மிகக் குறுகிய அகலத்தில் பாறைகளுக்கு நடுவே ஓடி வருகிறது.  இதனால் தான் இந்த இடத்தின் பெயர் ஆடு தாண்டும் காவிரி என்ற பொருள் வரும் வகையில் கன்னடத்தில் மேகத்தாட்டு என்று அழைக்கப்படுகிறது.  இப்படி குறுகிய பாதையில் மிக வேகமாக வரும் காவேரியைத் தடுத்து அதில் நீர்மின் நிலையமும் பெங்களூர் மைசூர் நகரங்களுக்கான குடிநீர் திட்டங்களுக்காக தடுப்பணைகள் கட்டவும் கர்நாடகா அரசு திட்டம் போட்டு இருக்கிறது.  1980களில் குண்டுராவ் கர்நாடகா அமைச்சராக இருந்தபோது இந்த திட்டத்துக்கான அடிப்படை தோற்றுவிக்கப்பட்டது.  அதன் பிறகு 2013இல் கர்நாடகாவில் காங்கிரஸ்  ஆட்சி ஏற்பட்டு சித்தராமையா தலைமையில் இந்த திட்டத்திற்கு முழு உத்வேகம் அளிக்கப்பட்டது.  அப்போதிலிருந்து தொடர்ந்து தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி இதை எதிர்த்து வந்திருக்கிறது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் இதற்கு தீவிரமான எதிர்ப்பைத் தெரிவித்தார். இதற்கான வழக்குகளும் போடப்பட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.  மேலும் மிகுந்த அடர் வனப் பகுதியான மேகதாது பகுதியில் இவ்வாறு சுற்றுச்சூழலுக்கு இடர் விளைவிக்கும் அளவில்  கட்டுமானங்கள்  ஏற்படுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய இடராக இருக்கும் என்ற வகையிலும் வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. இவை நிலுவையில் இருக்கின்றன.  ஆகவே மேகதாது அணை கட்டுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்றாலும் கூட அரசியல் நோக்கங்களுக்காக இந்த கோஷங்கள் கர்நாடகாவில் குறிப்பாக காங்கிரஸ் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டு,  இப்பொழுது அது வீரியமும் பெற்று இருக்கிறது.

கர்நாடகா முதல்வர் சீதாராமய்யா தமிழக மக்கள் பெருந்தன்மையுடன் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்.  இதற்கு திமுக அரசு  இன்னமும் உரிய பதிலடி கொடுக்கவில்லை. அவர்கள் தங்களுடைய குடும்ப நலமும் அரசியல் நலமும் தரும் விஷயங்களுக்கே முன்னுரிமை கொடுத்து செயலாற்றுவார்கள் என்பது நாம் அறிந்ததும் அனைவரும் அறிந்ததுதான்.  ஆனால் நிச்சயமாக இந்த விஷயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் எடுத்திருக்கும் மிகக் கடுமையான முடிவும் நிலைப்பாடும்  இந்த அணை கட்டும் முடிவிலிருந்து நம்மை காப்பாற்றம் என்று நம்புவோம்.

– ஓகை நடராஜன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top