கருணாநிதியின்  மறுபக்கம்

முன்னாள் முதல்வர்  கருணாநிதியின்  100வது பிறந்த தினத்தை, ஆண்டு முழுவதும் அரசின் சார்பாக கொண்டாடுவதாக  தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.   ஆண்டு முழுவதும் அரசு சார்பில் கொண்டாட  தகுதியானவரா கருணாநிதி  என்ற கேள்வி எழுகிறது.   கட்சியின் தலைவர் என்ற முறையில், ஆண்டு முழுவதும் கட்சியினர் கொண்டாடுவதை  எவரும் கேள்வி கேட்க முடியாது.  ஆனால்  அரசு செலவில் கொண்டாடும் போது பல கேள்விகள் எழுகின்றன.  தமிழகத்திற்கு கருணாநிதி செய்த சாதனைகளை விட துரோக செயல்கள் தான் கண்முன் வந்து நிற்கின்றன.  கருணாநிதியின் ஒரு பக்கத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வானளாவ புகழ்வது வேடிக்கையாக இருக்கிறது.  ஆகவே  கருணாநிதியின்  மறுபக்கத்தையும்  ஆய்வு செய்ய  வேண்டும்.  

‛‛திராவிடம் என்ற சொல் தமிழரின் நெஞ்சத்தில் பாய்ச்சப்படும் கொடிய நஞ்சு”- ‛‛திராவிடம், திராவிடர் என்றெல்லாம் பரப்பப்பட்டு, போலி தத்துவங்கள் தமிழ் மக்களின் இயல்பான தேசிய உணர்ச்சியை மங்க வைத்து, மழுங்க வைத்துக் கெடுக்கும் நாசக் கருத்துக்களாகும்.  இந்த நாசக் கருத்துக்களை பரப்புபவர்கள் பெருகினால், நாட்டில் செல்வாக்கு பெற்றால் தமிழகத்தின் பெருமையும் தமிழினத்தின் சிறப்பும், தமிழகத்தின் பண்பும் அடியோடு அழிந்து நாசமடைந்து விடும்”  என்றார்  மறைமலை அடிகளார்.

எவ்வளவு பூசி மெழுகினாலும், கருணாநிதி தனது ஆட்சியையும், கட்சியையும், தனது குடும்பம்,  மாறன் குடும்பத்தின் நலன்களுக்கு முக்கியத்துவம் தந்து இயக்கப்படும் வகையில் மாற்றியவர்.  பதவி பேரங்களுக்காக மட்டுமே டெல்லி அரசியலைப் பயன்படுத்தியவர்.  பகுத்தறிவு, தமிழ்ப்பற்று போன்றவற்றையெல்லாம் வெற்று கோஷங்களாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு நடைமுறையில் அவற்றுக்கு எதிராக எல்லாவற்றையும் செய்யக் கூடியவர்.  தமிழ்நாட்டில் ஊழல், போலீஸ் அராஜகம், தொழிலாளர் மீதான ஒடுக்கு முறை என்று எந்த சீர்கேட்டை எடுத்துக் கொண்டாலும், அதைத் திட்டமிட்டு கச்சிதமாகவும் அறிவியல்பூர்வமாகவும் செய்வதை ஆரம்பித்து விரிவுபடுத்தியவர்  கருணாநிதி.   இந்த கோணத்தில்  ஆய்வு செய்ய வேண்டும்.  13 ஆண்டு வனவாசத்திற்கு பிறகு ஆட்சியைப் பிடித்தார். ஆனால் மூன்றாண்களுக்குள்ளாகவே டிஸ்மிஸ்  செய்யப்பட்டார். உடனே நடந்து ஜனநாயக படுகொலை என  ஒப்பாரி வைத்தார். தன்மகளையும்,  தன்னையும் கைது செய்து சிறையிலடைத்த, இந்திராவோடு கூட்டணி வைத்து,  மத்திய அரசை  நிர்பந்தபடுத்தி, எம்ஜியாரின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வைத்தவர்.  மத்திய அரசை நிர்பந்தப்படுத்தி மாநில அரசை டிஸ்மிஸ் செய்யும் வழக்கத்தை உருவாக்கியவர்  கருணாநிதி.

கருணாநிதியின் தமிழ் பற்றுக்குத் தமிழகம் கொடுத்த விலை பல நூறு கோடி ரூபாய்கள். தமிழ் சினிமாக்கள் ஒரு கட்டத்தில் பெரும்பாலாக ஆங்கிலப் பெயர்கள் கொண்டே வெளிவந்தன. தமிழினக் காவலர் துடித்துப் போனார். தமிழில் பெயரிட்டால் வரி விலக்கு என்று அறிவித்தார். சினிமாக்களின் வசனமோ, பாடல்களோ நல்ல தமிழில் இருக்க வேண்டுமென்பதெல்லாம் தேவையில்லை.. அத்திட்டத்தையே கொஞ்சம் மாற்றி ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் கூடுதல் வரி என்று சொல்லி இருக்கலாமே? சொல்லவில்லை.   அரசு பணத்தை   இவ்வாறு செலவிட்டு தமிழ் பாசத்தை காட்டியவர்.     தனது குடும்பத்தினர்  மட்டும் இந்தி கற்றுக் கொள்ள வசதியாக தனியார் பள்ளியில் குறிப்பாக கான்வென்ட்களில் மட்டும் இந்தி இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.!  இவருடைய ஆட்சிக் காலத்தில் தான் ஆங்கில பள்ளிகள் புற்றீசல் போல் பெருகின.    ஐம்பதாண்டு கால கருணாநிதி ஆட்சியில்  தமிழில்  30,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்  10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை.   பிளஸ் 2-ல்  36,000 மாணவர்கள்  தேர்வு எழுத வரவில்லை.   இது தான் தமிழுக்கு இவர்கள் செய்த தொண்டு.

சர்க்காரியா கமிஷனால் வன்மையாக கண்டிக்கப்பட்டவர்.  முதல் மந்திரியின் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக அவருடைய குடும்பத்தினர் வீடுகளையும் சொத்துக்களையும் வாங்கி வந்தார்கள்”  என்பதான  குற்றச்சாட்டிற்கு முகாந்திரம்  இருப்பதாக கமிஷன் கருத்து தெரிவித்தது.  “ விஞ்ஞானபூர்வமான  ஊழல்  என கருணாநிதியின் மீது  குற்றச்சாட்டுகளை  வைத்தார். 

விஞ்ஞான ஊழல் முறையில், கோடிக்கணக்கில் சொத்துக் குவித்த கருணாநிதி, 2009ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் காணப்படும் சொத்துக்கள் எவ்வாறு வந்தது என்பதை தெரிவிக்க மறந்துவிட்டார். சன் டிவியில் இருந்து இவர் தனது பங்காக பெற்ற 100 கோடி ரூபாய் மிகவும் சிறிய தொகை, அதில் உள்ள மர்மம் இன்னும் மர்மமாகவே இருப்பதாக பலரும் கூறுகின்றனர்.

அநாகரிக, ஆபாச வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் கருணாநிதி,  சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் திருமதி அனந்தநாயகி, திராவிட நாடு எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு,  ஆபாசமாக  பதிலளித்தவர்.  இவரது ஆபாச பேச்சுக்களை மிகப் பெரிய புத்தகமாக வெளியிட முடியும்!  இந்து தெய்வங்களை ஆபாசமாக  திட்டியதில் இவர் தான் முதன்மையானவர்.

இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி வாழ்நாள் போராளி என்றும் கடைசிக் காலத்தில் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டவர் என்றும் ஒரு கட்டுரைச் சொன்னது. கருணாநிதியைப் பொறுத்தவரை பல விஷயங்கள் ‘பொய்யாய், பழங்கதையாய் மெல்ல மெல்லப் போனதுவே தான்’. தமிழ் மொழி, இலங்கைப் பிரச்சினை எல்லாமே ஆரம்பத்தில் கொள்கை, சித்தாந்தம் என்று தான் ஆரம்பிக்கும். அப்புறம் பாதி வழிக்கு மேல் அது வெறும் பிழைப்பு வாதமாகி இருக்கும். 1980-களில் இலங்கைப் பிரச்சினை அவருக்கு அரசியல் சித்து விளையாட்டுக்குத் தான் பயன் பட்டது. அதற்கு மகுடம் வைத்தது அந்த 2009 உண்ணாவிரதம் என்கிற கூத்து. நடப்பதோ இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் போர். இவரோ மாநில அரசியல் தலைவர். இவர் உண்ணாவிரதம் இருந்தாராம், மத்திய அரசு இலங்கையோடு பேசியதாம், போர் நிறுத்தம் ஏற்பட்டதாம், இவர் உண்ணாவிரதத்தைக் கலைத்தாராம். இதை விட அத்தைக்கு மீசை முளைத்தது பார் என்று சொல்லியிருக்கலாம்.  இதையெல்லாம் உடன் பிறப்புகள் விடலைத்தனமாக நரம்பு புடைக்கச் சொல்லலாம்.  கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கு யார் பதில் சொல்வது!

உண்மையை சொல்வதென்றால், கருணாநிதி நூற்றாண்டு கொண்டாட ஏதுமில்லை, துக்கப்பட எண்ணிலடங்கா விஷயங்கள் இருக்கின்றன!

– ஈரோடு சரவணன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top