அதானி, அம்பானியிடம் எவ்வளவு நிதி வாங்கினீர்கள்: ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி!

‘‘தேர்தல் தேதி அறிவித்த உடன் அம்பானி, அதானியை விமர்சிப்பதை காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) நிறுத்தி விட்டார். அவர்களிடம் எவ்வளவு நிதி பெற்றீர்கள்’’ என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

தெலுங்கானாவின் கரீம் நகரில் இன்று (மே 08) நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நாடே முதன்மை என்ற நோக்கத்தில் பா.ஜ.க., பணியாற்றி வருகிறது. ஆனால், காங்கிரசும், பிஆர்எஸ் கட்சியும் குடும்பமே முக்கியம் என்ற கொள்கை அடிப்படையில் பணியாற்றுகின்றன.

அக்கட்சிகளானது, குடும்பத்தினால், குடும்பத்தினருக்காக, குடும்பத்தினரே இயக்கும் கட்சியாக உள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை. அக்கட்சிகளை ஊழல், சமரச அரசியல் மற்றும் மோசமான நிர்வாகம் ஆகியன ஒன்று சேர்க்கிறது.

குடும்பமே முக்கியம் என்ற கொள்கையால், முன்னாள் பிரதமர் நரசிம்மராவை காங்கிரஸ் அவமதித்தது. அவர் இறந்த பிறகும், அவரது உடலை காங்கிரஸ் அலுவலகத்திற்குள் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கௌரவப்படுத்தியது.

ரபேல் விமானம் இந்தியாவிற்கு வந்தது முதல், காங்கிரஸ் இளவரசர், கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர் பற்றி பேசி வருகிறார். பிறகு அம்பானி, அதானி என்றார். ஆனால், தேர்தல் தேதி அறிவித்த உடன், அம்பானி, அதானியை விமர்சிப்பதை ராகுல் நிறுத்திவிட்டார். அவர்களிடம் எவ்வளவு நிதி வாங்கினீர்கள்? இருவரையும் விமர்சிப்பதை நிறுத்தியதற்கு என்ன ஒப்பந்தம் போட்டுள்ளீர்கள் என கேட்க விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top