ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1,445 கோடி ஒதுக்கியும் அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைக்கவில்லை: சூலூரில் அண்ணாமலை!

கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1,445 கோடி நிதி ஒதுக்கியும், சாலைகள் கூட சரிவர மேம்படுத்தப்படாமல், அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிராமங்களை சென்றடையாமல் வைத்திருக்கிறார்கள் என சூலூர் சட்டமன்ற தொகுதியில் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதி தேர்தலை முன்னிட்டு சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுத்தூர், கிருஷ்ணாபுரம், கரையாம்பாளையம் பிரிவு, செஞ்சேரிமலை, பூராண்டாம்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், இருகூர் பகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன், தாமரை சின்னத்துக்கு தலைவர் அண்ணாமலை நேற்று (ஏப்ரல் 16) வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் மக்கள் முன்பு பேசியதாவது:

வரும் பாராளுமன்றத் தேர்தல், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் தேர்தல். நாட்டை வலிமையாக, பொருளாதாரத்தில் முதன்மையாக மாற்ற, நதி நீர் இணைப்பு உள்ளிட்ட மிக முக்கியமான முடிவுகள் எடுக்க, நமது பிரதமர் அவர்கள் கரங்களை, நாடு முழுவதும் வலுப்படுத்த வேண்டும். நமது கோவை பாராளுமன்றத் தொகுதியும், நமது பிரதமர் கொண்டு வரும் நலத்திட்டங்கள் மூலம் முழுமையாகப் பலன்பெற, இங்கிருந்தும், நாம் நம்முடைய பாராளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வரவிருக்கும் தேர்தல், நாட்டுக்கான தேர்தல். நாட்டின் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல். எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியவில்லை. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மட்டும்தான் தகுதியான வலிமையான ஒரே பிரதமராக இருக்கிறார். வீட்டையும், நாட்டையும் காக்கும் ஒரே தலைவர் நமது பிரதமர் மோடி அவர்கள் மட்டும்தான்.

கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியின், குடிதண்ணீர்ப் பிரச்சினை, உட்கட்டமைப்பு, விசைத்தறி, விவசாயப் பிரச்சினைகள் என அனைத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வண்ணம், நூறு வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும், ஜூன் 4ஆம் தேதியிலிருந்து 500 நாட்களில், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு கொண்டு வருவோம் என்ற உறுதி அளிக்கிறேன். மேலும், ஒரு ஆண்டில், அடுத்த ஜூன் 4, 2025க்குள், விசைத்தறிப் பிரச்சினைக்கு முழுமையான, நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவேன் என்றும் உறுதி அளிக்கிறேன்.

கடந்த பத்து ஆண்டுகளில், நமது பிரதமர் மோடி அவர்கள் கொண்டு வந்த திட்டங்களான, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தில், ஒவ்வொரு கிராமத்துக்கும் பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், முழுமையாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி கிடைக்காமல் இருக்கிறது. வீடுகள் இல்லாதவர்கள் அனைவருக்கும் மோடி வீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இத்தனை ஆண்டுகளாகப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், தங்கள் முக்கியப் பணிகளான இவை எதையும் நிறைவேற்றவில்லை. கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1,445 கோடி நிதி ஒதுக்கியும், சாலைகள் கூட சரிவர மேம்படுத்தப்படாமல், அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிராமங்களை சென்றடையாமல் வைத்திருக்கிறார்கள். கோவை வளர்ச்சிக்காகப் பேச வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், பத்து ஆண்டுகளாக தொகுதிக்காக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

இவை அனைத்தும் மாற, கோவைக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக, வளர்ச்சித் திட்டங்களுக்கும், உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும், ஒரு ரூபாய் கூட ஊழல் இல்லாமல் செயல்படுத்தப்பட, ஜல் ஜீவன் திட்டம் மூலம், சுத்தமான குடிநீர் ஒவ்வொரு வீடுகளையும் சென்றடைய, ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேறிட, கோயம்புத்தூர் மாநகரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளும், நகரத்தின் அடிப்படை வசதிகள் அனைத்தும் பெற்று வளர்ச்சி பெற, மத்திய அரசின் திட்டம் முழுமையாக மக்களைச் சென்று சேர்வதை கண்காணிக்க, கேள்வி கேட்க, நமது குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய, அவர்கள் அடுத்த 25 ஆண்டுகளில், வளர்ச்சி பெற்ற இந்தியாவில் வசிக்க, உங்கள் அன்புத் தம்பி, உங்கள் வீட்டுப் பிள்ளை, அண்ணாமலை ஆகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top