அரக்கோணம் தொகுதியில் வெள்ளமாகப் பாயும் பணம்: திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய அன்புமணி வலியுறுத்தல்!

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் பணம் வெள்ளமாகப் பாய்கின்றது. எனவே திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இதனை தடுக்காத தேர்தல் அதிகாரியை பணியில் இருந்து நீக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஏப்ரல் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் தோல்வி பயம் காரணமாக திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பணத்தை வெள்ளமாக வாரி இறைக்கிறார். தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது குறித்து வீடியோ ஆதாரத்துடன் புகார்கள் அளிக்கப்பட்டும் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான வளர்மதி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியின் கைப்பாவைகளாக மாறி,  மோசடிக்கு துணை போவது கண்டிக்கத்தக்கது.

ஓச்சேரி கிராமத்தில் உள்ள தனியார் விடுதியில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 4 வாகனங்களில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 லட்சம் பறிமுதல்  செய்யப்பட்டது. ஆனால், பூபாலன் என்ற உதவி தேர்தல் அதிகாரி தலையிட்டு, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும், வாகனத்தையும் விடுவித்திருக்கிறார். அந்த வாகனங்களுக்கு மாற்றாக வேறு ஒரு வாகனத்தை சோதனையிட்டதாகவும், அதில் பணம் இல்லை என்றும் போலியாக ஆவணங்களை தயாரித்திருக்கின்றனர். இது அப்பட்டமான தேர்தல் விதிமீறலாகும்.

திமுகவினரால் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யபட்ட பனம் ரூ.34,000 இரண்டாடி கிராமத்திலும், ரூ.1,08,000 காட்டரம்பாக்கம் கிராமத்திலும் கைப்பற்றப்பட்டன. ஆனால்,  அவற்றின் மீது எந்த மேல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் வளர்மதியிடம் பா.ம.க. வேட்பாளர் வழக்கறிஞர் பாலு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும்  மேற்கொள்ளப்படவில்லை.

நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது. ஆனால், மாவட்ட தேர்தல் அதிகாரியே திமுகவினரின் தேர்தல் விதி மீறல்களுக்கு துணை போனால் தேர்தலை எவ்வாறு நியாயமாக நடத்த முடியும். இது ஜனநாயகப் படுகொலைக்கு தான் வழிவகுக்கும். வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்கும் அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; மாவட்ட ஆட்சியர்  வளர்மதியை தேர்தல் அதிகாரி பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top