எங்களின் ஆதரவால் ஆட்சியை தக்க வைத்தார் ஈபிஎஸ்! அன்புமணி ராமதாஸ்!

எங்களின் ஆதரவால், அதிமுக ஆட்சியை தக்கவைத்தது என்று ஈபிஎஸ் மீது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடும் விமர்சனம் வைத்துள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் தொடர்ந்து பயணித்து வருகிறோம். இந்த தேர்தலிலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து உள்ளோம்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஈபிஎஸ் ,பா.ம.க.வை வேடந்தாங்கல் பறவை போல் மாறி மாறி செல்கிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதை அவர்கள் முழு மனதோடு தரவில்லை. 2019-ம் ஆண்டு தேர்தலுக்கான தேதி அறிவிப்பு செய்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இந்த உத்தரவை பிறப்பித்தார்கள்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வந்தால்தான் இடஒதுக்கீடு கொடுப்போம் என்று தெரிவித்தனர். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தனர். அதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. மீண்டும் அந்த சட்டத்தை கொண்டு வர அ.தி.மு.க. முயற்சி செய்யவில்லை. எங்களுடைய ஆதரவினால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.

தற்போது கூட்டணிக்காக வலை வீசினார். திருமாவளவன், சீமான் போன்றோருக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் கூட்டணிக்கு வராததால் எங்களுக்கு அழைப்புக் கொடுத்தார்.

அதுபோல் தி.மு.க. ஆட்சியிலும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர அக்கறை காட்டவில்லை. சமூகநீதிக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தமில்லை. 2 வருடமாக இழுத்தடித்து வருகிறார்கள்.

தற்போது பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்த உடன் பெரிதாக பேசுகிறார்கள். விமர்சனம் செய்யும் கட்சிகள் தனித்து நின்று தேர்தலில் போட்டியிட தயாரா? நாங்கள் தனியாக நிற்க தயார்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top