ரஷ்ய மக்களுக்கு ஆதரவாக இந்தியா நிற்கும்: மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் அளவிற்கு இந்த அரங்கத்தில் இடம் உண்டு. அங்கு பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்த மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், இசை அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தினர்.

இதனால், உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தீ விபத்தில், இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. புகை அரங்கம் முழுவதும் பரவியது. இதனால், மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர்.

இது பற்றி ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது. 140-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளனர். 60 பேர் தீவிர சிகிச்சை பெறக்கூடிய நிலையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதனை தொடர்ந்து 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கூரையின் இடிபாடுகளில் சிக்கிய நபர்களில் , பலரும் மீட்பு குழுவினரால் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்றும் முதலில் கூறப்பட்டது. இந்த சூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

ரஷியாவில் சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். 5-வது முறையாக வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து பதவி காலம் முழுவதும் அதிபராக நீடிப்பார். இதனால், உக்ரைனுக்கு எதிராக 2 ஆண்டுகளாக நடந்து வரும் போர் தீவிரமடைய கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில், ‘‘மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாதத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறோம். துயரமான நேரத்தில் ரஷ்ய மக்களுடன் இந்தியா தனது ஒற்றுமையையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறது’’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top