சந்தேஷ்காலி குற்றவாளிகளை மம்தா பாதுகாக்கிறார்.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

‛‛சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான கொடூரங்களுக்குக்  காரணமான குற்றவாளியை மேற்கு வங்க அரசு பாதுகாக்கிறது. மம்தாவுக்கு, பெண்களை விட அரசியல் முக்கியமாக தெரிகிறது’’, என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆரம்பாக் பகுதியில் ரூ.7,200 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவடைந்த பணிகளை துவக்கி வைத்தார். ரூ.2,680 கோடி மதிப்பிலான ரயில் விரிவாக்கப் பணிகளையும், ரூ.2,790 கோடி மதிப்பிலான ஹால்டியா பரவுனி கச்சா எண்ணெய் பைப்லைன் திட்டத்தையும் துவக்கி வைத்தார்.

பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

சந்தேஷ்காலி பகுதி சகோதரிகளுக்கு திரிணமுல் காங்கிரஸ் செய்த கொடுமைகளை பார்த்து ஒட்டு மொத்த நாடும் கோபத்தில் உள்ளது. இங்கு நடந்த சம்பவம் வெட்கக்கேடானது. 2 மாதங்களாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்படவில்லை. அவரை பாதுகாக்க மம்தா அரசு முயற்சி செய்தது.

இ.ண்.டி. கூட்டணி தலைவர்கள், இதனை பார்த்து அமைதியாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். இங்கு நடந்ததை பார்த்து சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராயின் ஆன்மா வேதனை அடைந்து இருக்கும். சந்தேஷ்காலி பெண்களை மம்தா ஏமாற்றிவிட்டார். அவருக்கு பெண்களை விட அரசியல் முக்கியமாகி விட்டது.

திரிணமுல் காங்கிரஸ் தலைவர் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டார். இம்மாநில பெண்களின் மரியாதை மற்றும் கவுரவத்திற்காக பாஜகவினர் பாடுபடுகின்றனர். பாஜகவினரால் தான் குற்றவாளி கைது செய்யப்பட்டார். சந்தேஷ்காலி பகுதியில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடூரங்களை விட, சிலரின் ஓட்டுகள் முக்கியமாகி விட்டதா என முதல்வரிடம் மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

சமரச அரசியலில் ஈடுபடுவதிலும், ஊழல்வாதிகளை காப்பதிலும் மட்டுமே ‛இ.ண்.டி.’ கூட்டணி கட்சித் தலைவர்கள் நோக்கமாக கொண்டு உள்ளனர். மாநிலத்தில் ஊழல் மற்றும் குற்றங்களை மம்தா அரசு ஆதரிக்கிறது. அவர்களை விடுவிக்க மம்தா போராட்டம் நடத்துகிறார்.

மாநிலத்தின் வளர்ச்சியையும் அவர் விரும்பவில்லை. அரசு வேலை முதல் கால்நடைக் கடத்தல் என அனைத்திலும் திரிணமுல் காங்கிரஸ் ஊழல் செய்கிறது. இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இனியும் திரிணமுல் காங்கிரஸ் கொள்ளையடிக்க அனுமதிக்கலாமா?. அவர்களை விடமாட்டேன். திரிணமுல் காங்கிரசின் முதல் எதிரி நான் தான். அக்கட்சியின் ஊழலுக்கு முடிவு கட்டப்படும்.

ஏழைகளுக்கு இலவச மருத்துவ வசதி அளிக்கப்பட வேண்டும். மேற்கு வங்கத்திற்கு மத்திய அரசு நிதி அனுப்புகிறது. ஆனால், திரிணமுல் காங்கிரஸ் அதனை பயன்படுத்துவது இல்லை. தடைகளை ஏற்படுத்துகின்றனர். சிறுபான்மையினரின் ஆதரவு உள்ளதாக திரிணமுல் காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால், இஸ்லாமியர்கள் அக்கட்சிக்கு எதிராக ஓட்டுப் போடுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் தோற்கடிக்கப்படும். அதில் இருந்து மாநிலத்தின் ஆட்சியில் இருந்து அக்கட்சி பிரியாவிடை பெறுவதற்கான கவுண்ட் டவுன் துவங்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top