சமுதாய வானொலி நிலையங்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படும்: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்!

நாட்டில் சமுதாய வானொலி சேவை ஆயிரமாக உயர்த்தப்படும் என மத்திய செய்தி, ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய செய்தி, ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் ஆகியவை இணைந்து நடத்திய மண்டல சமுதாய வானொலி சம்மேளனம் (தெற்கு) மாநாடு (பிப்ரவரி 13) அன்று நடைபெற்றது.

இதில் காணொலி மூலம் பங்கேற்ற மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேசியதாவது:

ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் சமுதாய வானொலி நிலையங்களை ஏற்படுத்த வேண்டும் என 2002-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. 2004-இல் அப்போதைய மத்திய அமைச்சர் எல்.கே.அத்வானி, இந்த வானொலி சேவையைத் தொடங்கி வைத்தார். இந்த வானொலி உள்ளூர் மொழிகளில் ஒலி பரப்பப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்துக்காக தொடங்கப்பட்ட இந்த சமுதாய வானொலி, பின்னர் கிராமப் பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தேவையான தகவல்களையும் அளித்து வருகிறது. அரசின் நலத் திட்டங்கள் குறித்து சமுதாய வானொலி ஒலிப்பரப்ப வேண்டும். தற்போது, இந்தியாவில் 481 சமுதாய வானொலி நிலையங்கள் உள்ளன.

அடுத்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1,000-ஆக உயர்த்தப்படும். முன்பு ஒரு சமுதாய ரேடியோ நிலையம் அமைக்க ரூ.7.5 லட்சம் நிதி வழங்கப்பட்டது. தற்போது புதிய சமுதாய வானொலி நிலையங்களை தொடங்க ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. சமுதாய வானொலி நிலையம் அமைப்பதற்கான உரிமம் வழங்கும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top