பொங்கல் இலவச வேட்டி, சேலையில் ஊழல்: பா.ஜ.க. சார்பில் புகார் அளிக்க முடிவு!

பொங்கல் பண்டிகை இலவச வேட்டியில் விலை குறைவான பாலியஸ்டர் நூலைப்  பயன்படுத்திய ஊழல் தொடர்பாக தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் அளிக்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டியில், வழக்கமாகப் பயன்படுத்தி வந்த பருத்தி நூலின் அளவைக் குறைத்து விட்டு, விலை குறைவான பாலியஸ்டர் நூலைப் பயன்படுத்தி ஊழல் நடந்திருக்கிறது என்று, கைத்தறித் துறை அமைச்சர் காந்தி மீது குற்றச்சாட்டு வைத்திருந்தோம். அதற்கு அவர் 2003 ஆம் ஆண்டு அரசாணையை மேற்கோள் காட்டி, மக்களைத் தவறாகத் திசைதிருப்புகிறார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு அரசாணையின்படி, வேட்டியில் வெஃப்ட் பகுதி நெய்ய பாலியஸ்டர் நூலை பயன்படுத்தலாம். ஆனால், வார்ப் பகுதியை நெய்ய கடந்த ஆண்டு வரை 100% பருத்தி நூல் தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு, வார்ப் பகுதி நெய்யவும், விலை குறைவான பாலியஸ்டர் நூலை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு கிலோ ₹320 வரை விற்கப்படும் பருத்தி நூலைப் பயன்படுத்தாமல், வேண்டுமென்றே, அதில் பாதி விலையான ₹160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வார்ப் பகுதியை  நெய்திருக்கிறார்கள். ஒரு வேட்டியில், 78% பாலியஸ்டர் நூலைப்  பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் நாங்கள் சோதனை செய்ததும் வார்ப்  பகுதியைத்தானே தவிர, வெஃப்ட் பகுதியை அல்ல. இது தொடர்பான அனைத்து ஆதாரங்களுடன், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளதாக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top