களத்திற்கே வராத அமைச்சர் எப்படி பொதுமக்களை மீட்பார்? மாநில தலைவர் அண்ணாமலை!

வெள்ள பாதிப்பு மீட்பு விவகாரத்தில், களத்துக்கு வர இயலாத நிலையில் உள்ள ஒரு அமைச்சர் வந்து, பொதுமக்களை மீட்பார் என்று வெற்று அறிவிப்பு வெளிட்ட திமுக அரசு, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மூத்த அமைச்சர்கள் பலரை நியமித்திருப்பதாக, கடந்த டிசம்பர் 18 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த அமைச்சர்களில் ஒருவரான, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், சொந்த அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனை, களத்திலேயே காண முடியவில்லையே என்று பொதுமக்கள் உட்பட, நாங்கள் அனைவருமே தேடிக் கொண்டிருந்த போது, மூன்று நாட்களாக, மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சரை, இன்றுதான் (டிசம்பர் 20) மீட்டு வெளியில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.

தனது அமைச்சரே வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்பது கூடத் தெரியாமல், மீட்புப் பணியில் அவரது பெயரையும் சேர்த்து, பெயருக்கு ஒரு பட்டியலை அறிவித்து விட்டு, அவசரகதியாக ‘இந்தி’ கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த, டெல்லிக்குச் சென்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

களத்துக்கு வர இயலாத நிலையில் இருக்கும் அமைச்சர் வந்து, பொதுமக்களை மீட்பார் என்ற வெற்று அறிவிப்பு, திமுக அரசு, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top