தீபாவளிக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை! உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய அளவில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் இங்குதான் 95 சதவீதத்துக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நிபந்தனைகளால் சிவகாசி பட்டாசு ஆலைகளில் பசுமைப் பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிரந்தர உரிமம் பெற்ற 2,500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனைக் கடைகள் உள்ளன. பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை, சரவெடி உற்பத்திக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 60 சதவீத பட்டாசுகள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இருப்பினும் தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு  ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளது. 

இந்த ஆண்டு முன்னதாகவே, ஆஃப் சீசன் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. எனினும் இது தீபாவளி பட்டாசு விற்பனையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை. இந்த ஆண்டு தீபாவளி சீசனுக்காக ஆடிப்பெருக்கு அன்று 1,500 பட்டாசு விற்பனை கடைகள் சிறப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டன. இறுதிக் கட்டத்தில் நாடு முழுவதும் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றதால், கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் பட்டாசு விற்பனை ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு நடைபெற்றது.

இது குறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூறும்போது, தமிழகத்தில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆரம்பத்தில் பட்டாசு விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் இறுதிக் கட்ட விற்பனை மும்முரமாக நடந்ததால், கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் உற்பத்தியாளர்கள், மொத்த மற்றும் சிறு விற்பனையாளர்களிடம் இருந்த அனைத்து பட்டாசுகளும் விற்று தீர்ந்து விட்டன என்று கூறினர்.

தமிழகத்தில் இந்து பண்டிகையான தீபாவளியை முடக்க பல்வேறு வழிகளில் விடியாத திமுக அரசு முட்டுக்கட்டை போட்டு வந்தது. ஒரு புறம் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சமயத்தில் பட்டாசு கடை வைப்பதற்கான உரிமத்தை வழங்க பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதனால் பலர் கடை வைக்க முடியாமல் போனது. இருந்தபோதிலும் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்த கடைகளுக்கு சிரமம் பார்க்காமல் சென்று பட்டாசுகளை வாங்கி இந்த தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். திமுக அரசு நினைத்ததை விட பல மடங்கு பட்டாசு விற்பனை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top