தீபாவளியை முன்னிட்டு 633 கோடிக்கு மது விற்பனை: குடிபோதை விபத்து, கொலையில் 20 பேர் உயிரிழப்பு!

தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்த நிலையில் கடந்த நவம்பர் 12 அன்று ஒரே நாளில் வேதனை தரும் வகையில் குடிபோதை மற்றும் விபத்து கொலை காரணங்களினால் தமிழகம் முழுவதும் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.  அதே சமயம் விடியாத திமுக அரசு டாஸ்மாக் நிர்வாக கணக்குப்படி கடந்த மூன்று நாட்களில் மட்டும் 633 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்துள்ளது. 

டாஸ்மாக் நிறுவனத்திற்கு 4,829 சில்லறை மது கடைகள் உள்ளன. இவற்றில் தினமும் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு மது வகைகள் விற்பனையாகின்றன. இது ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. அதன்படி தீபாவளி பண்டிகையை ஒட்டி அனைத்து மது கடைகளிலும் வெள்ளிக்கிழமையே கூட்டம் அலைமோதியது. சனி, ஞாயிறு அன்றும் விற்பனை ஜோராக நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை 165 கோடி; சனிக்கிழமை, 220.85 கோடி; தீபாவளி நாளில் 246.78 கோடி ரூபாய் என மூன்று நாட்களில் 633 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.

அதே நேரத்தில் மாநிலம் முழுவதும் போதை தலைக்கேறிய குடிமகன்களால் விபத்து மற்றும் பல்வேறு கொலை சம்பவங்களும் நடந்துள்ளன.

சென்னை அண்ணா நகர் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 2:15 மணிக்கு அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்றிருந்த ஏழு பேர் மற்றும் அங்கிருந்த வாகனங்கள் மீது வரிசையாக மோதி சூப்பர் மார்க்கெட் சுவரில் இடித்து நின்றது. அந்த காரில் இருந்த இரு ஆண்கள், ஒரு பெண் தப்ப முயன்றனர். அதில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆசிப் என்பவர் சிக்கினார். கார் மோதியதில் கல்லூரி மாணவர்கள் கியூமர் 18, ஜான் நிஷா 18, விஜய் யாதவ் 21, ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொடுங்கையூரைச் சேர்ந்த தினேஷ்பாபு 21, கார்த்திக் 22, ஆகிய இருவரும் பிறந்த நாள் கொண்டாடிவிட்டு உணவருந்த வந்தபோது கார் மோதி காயமடைந்தனர். கார்த்திக், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், தினேஷ்பாபு, தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை செய்து வந்த அரும்பாக்கத்தைச் சேர்ந்த குமார், சோழிங்கநல்லூரைச் சேர்ந்த நாகசுந்தரம் ஆகிய இருவரும் கவலைக்கிடமான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நாகசுந்தரம், 74, விஜய் யாதவ் 21 ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தனர்.

நேற்று முன்தினம் இரவு தன் நண்பர் ரமணா மற்றும் பெண் தோழி ஒருவருடன் ஆசிப் மது அருந்தி விட்டு போதையில் காரை ஓட்டிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. தப்பியோடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்படி சென்னையில் மட்டும் தீபாவளி அன்று குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 57 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து தலா, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மது போதைக் கொலைகள்:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மாங்கொட்டாபுரம் விவசாயி பண்டாரம் 69, இவரது மகன் வேல்முருகன் 25 குடிப்பதற்கு தனது தந்தை பண்டாரத்திடம் பணம் கேட்டு தகராறு செய்து, அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.

நாசரேத் அருகே மூக்குப்பீறியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜ் 38, குடிப்பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் மாலையில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அங்குள்ள சுடுகாட்டுப் பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

முறப்பநாடு அருகே மணக்கரையைச் சேர்ந்தவர் மணி 60, ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். நேற்று மாலை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை ஐந்து பேர் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

திருநெல்வேலி மாவட்டம், திடியூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. அங்கு நடக்கும் கட்டுமான பணியில் கன்னியாகுமரி மாவட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். தீபாவளி அன்று இரவு தொழிலாளர்கள் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது. இதில் ஜூலியஸ்குமார் 40, கொலை செய்யப்பட்டார். நேற்று காலை கல்லூரிக்கு ஊழியர்கள் வந்தபோது கொலை நடந்தது தெரிந்தது.

நெல்லையை சேர்ந்தவர் திம்மப்பன் 50, இவர் சென்னை செங்குன்றம் பகுதியில் முறுக்கு தயாரிப்பு கடை நடத்தி வருகிறார். அங்கு தென்காசியை சேர்ந்த அய்யப்பன் 24, வேலை செய்கிறார். இவரும் ‘லிப்ட்’ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சோனு 30, என்பவரும் தீபாவளியை இரவு மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் சோனுவின் தலையில் அய்யப்பன் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். தலைமறைவான அய்யப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சூர்யா 27, சென்னை மறைமலை நகர் சுப்பிரமணி 37, ஈரோடு முருகேசன் 39, புதுக்கோட்டை கலியமூர்த்தி 45, ராஜபாளையம் சிவகுமார், நாகை மாவட்டம் விஜயகுமார் 28 உள்ளிட்டோர் மது போதையால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று மாநிலம் முழுவதம் மதுபோதையில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொலை சம்பவங்களால் 20 பேர் வரை தீபாவளி அன்று உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளியை ஒருபுறம் மக்கள் அமைதியாக கொண்டாடி வரும் நிலையில், விடியாத அரசு டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்து 632 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்திருப்பதாக திமுக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் பெருமமை பேசி வரும் சமயத்தில் அப்பாவி 20 உயிர்கள் பறிபோயுள்ளது. இதற்கு விடியாத அரசுதான் காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதை எல்லாம் கட்டுப்படுத்த முடியாத அரசு இவர்கள் நேரம் தவறி வெடி போட்டார்கள், மத்தாப்பு கொளுத்தினார்கள் என்று 2000 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது தான் வேடிக்கை…

வெடிக்க நேரம் உண்டு, குடிக்க நேரம் இல்லையா என்று கொதிக்கிறார்கள் பொதுநல ஆர்வலர்கள்! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top