விடியாத அரசின் போலீசை நம்பக்கூடாது.. வெடிகுண்டு வழக்கை சிபிஐ அல்லது என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற வேண்டும்: வானதி சீனிவாசன் அதிரடி!

தமிழ்நாடு காவல் துறை தி.மு.க.,வினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால் ஆளுநர் மாளிகையில் வீசப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டு வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் சென்னை வருகை தர உள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பெட்ரோல் வீசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல் துறையே தெரிவித்துள்ளது. அந்த ரவுடியிடம் மேலும் நான்கு பெட்ரோல் குண்டுகள் இருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவையில் குண்டு வைத்து அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளை, கருணை அடிப்படையில் விடுதலை செய்ய திமுக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

இந்தச் சூழலில் கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்தால், அதனால் தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. பயங்கரவாதிகளை பயங்கரவாதிகளாகவே பார்க்க வேண்டும். அவர்களை விடுவித்தால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் கிடைக்கும் என அரசியல் லாபக் கணக்கு பார்க்கக் கூடாது.

திமுக அரசின் செயல்பாடுகளை, அதன் இந்து விரோதப் போக்கை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால், பகிர்ந்தால் கூட வார இறுதி நாட்களில் நள்ளிரவில் வீடு புகந்து கைது செய்யவே தமிழ்நாடு காவல்துறைக்கு நேரம் போதவில்லை.

ஆளுநர் மாளிகையிலேயே ஒருவர் குண்டு வீச துணிகிறார் என்றால், அது ஒரு தனி நபரின் முயற்சியாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு காவல் துறை தி.மு.க.,வினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top