பாரதத்திற்கு எதிரான பல பொய் செய்தி: ‘நியூஸ்கிளிக்’ மீது போலீஸ் பரபரப்பு தகவல்!

டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள ‘நியூஸ்கிளிக்’ இணையதள நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா, சீனாவிடம் மிகப்பெரிய நிதியை பெற்று, இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை பகுதிகளை சீனாவின் பகுதிகள் என  பொய்யான செய்திகளை பரப்பி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியை தலைமையிடமாக வைத்து நியூஸ்கிளிக் இணையதள ஊடக நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் பணியாற்றுபவர்கள் அனைவரும் நமது பாரதத்திற்கு எதிரான செய்திகளையே பரப்பி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டது. அதில் டெல்லியில் இயங்கி வரும் நியூஸ்கிளிக் செய்தி நிறுவனம், அமெரிக்க தொழிலதிபர் நெவில் ராய் சிங்காமிடம் மிகப்பெரிய தொகையை வாங்கியதாகவும், சீனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த செய்தி ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சியடைய செய்தது.

இதை தொடர்ந்து நியூஸ்கிளிக் அலுவலகம் மற்றும் அதில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் வீடுகள் உட்பட டெல்லியில் சுமார் 88 இடங்களில், டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அதன் பின், நியூஸ்கிளிக் இணையதள நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவின் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை பயங்கரவாத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த நிலையில், போலீசார் தாக்கல் செய்துள்ள, ‘ரிமாண்ட்’ மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரபிர் புர்கயஸ்தா, தொழிலதிபர் நெவில் ராய் சிங்காம் மற்றும் அவருக்கு சொந்தமாக ஷாங்காயில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றும் சீன ஊழியர்கள் இடையே பல்வேறு இ – மெயில் தகவல் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. அதில் காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம், இந்தியாவுக்கு உட்பட்ட பகுதிகள் இல்லை என்பதை நிறுவ அவர்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நமது நாட்டின் வடக்கு எல்லைகளை சீனாவுடன் இணைக்க அவர்கள் முயற்சித்துள்ளனர். காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை பாரதத்தின் பகுதிகள் அல்ல என வரைபடத்தில் காட்டுவது, நாட்டின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை குறைத்து மதிப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நியூஸ்கிளிக் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கவுதம் நாவ்லக்கா என்பவர், பாரதத்திற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஏஜென்ட் குலாம் நபி பாய் என்பவருடன் இணைந்து நமது நாட்டுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டியுள்ளார்.

அதன்படி புர்கயஸ்தா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு, 115 கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு நிதிகள் மலைபோல் குவிந்துள்ளன. அதனை வைத்துக்கொண்டு நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை சீர்குலைக்கவும், விவசாயிகளின் போராட்டத்தை நீட்டித்து சொத்துக்களை சேதப்படுத்தவும் இந்த நிதியை பயன்படுத்தி வந்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் மத்திய அரசின் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மிகவும் இழிவுபடுத்தம் விதமாக இவர்கள் செய்தியை பரப்பி வந்தனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது, ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மைக்கான மக்கள் கூட்டணி என்ற குழுவுடன் இணைந்து தேர்தல் பணிகளை சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையை தமிழகத்திலும் எடுத்தால் நன்றாக இருக்கும். இங்கும் சிலர் பத்திரிகையாளர் போர்வையில் நாட்டிற்கு எதிரான செய்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களையும் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டால், பாரத நாட்டிற்கு எதிராக பொய் செய்தியை யாரும் பரப்ப முன்வர மாட்டார்கள்  என்பது பொதுமக்களின் கருத்தாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top