ரயில்வே வாரியத்தின் முதல் பெண் தலைவராக ஜெயா வர்மா சின்ஹா நியமனம்!

ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹாவை மத்திய அரசு நியமனம் செய்தது. ரயில்வே அமைச்சகத்தின் 105 ஆண்டு கால வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

தற்போது ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் அனில்குமார் லகோட்டியின் பதவிக் காலம் (ஆகஸ்ட் 31) முடிவடைந்தது.

இந்த நிலையில் ரயில்வே வாரியத்தின் செயல்பாடு மற்றும் வர்த்தக மேம்பாட்டு உறுப்பினராக இருக்கும் ஜெயா வர்மா சின்ஹாவை புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக மத்திய அரசு நியமித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு இதற்கான ஒப்புதலை அளித்துள்ளதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயா வர்மா சின்ஹா வரும் அக்டோபர் 1-ம் தேதி, பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் புதிய பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவர் ஒரு வருடத்திற்கு இப்பதவி வகிப்பார். அலகாபாத் பல்கலைக்கழக மாணவியான ஜெயா வர்மா சின்ஹா, இந்திய ரயில்வே துறையில் (ஐஆர்டிஎஸ்) 1988-ல் பணியில் சேர்ந்தார். வடக்கு ரயில்வே, தென் கிழக்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே ஆகிய 3 மண்டலங்களில் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் நடந்த கோர ரயில் விபத்தின்போது சிக்கலான சிக்னல் அமைப்பு முறையை செய்தியாளர் கூட்டங்களில் விளக்கியதில் ரயில்வே துறையின் முகமாக பார்க்கப்பட்டார்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ரயில்வே ஆலோசகராக ஜெயா வர்மா சின்ஹா 4 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது கொல்கத்தா முதல் டாக்கா இடையிலான மைத்ரி எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top