செந்தில் பாலாஜி வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி கைது சரியானது என உச்ச நீதிமன்றம் தீர்பளித்த பின்னர், அவரை 5 நாட்கள் காவலில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

அதன் பின்னர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஆகஸ்ட் 25ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் செந்தில் பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகை, 3,000 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களை அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தாக்கல் செய்தது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top