என்.ஐ.ஏ., விசாரணை வளையத்தில் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம்

போலி ஆவணங்கள் வாயிலாக, இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க, அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள, உளவுத்துறையின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அவரது மனைவியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பணிபுரிந்தார். அவரது பதவி 27.06.2023 அன்று பறிக்கப்பட்டு, காவல் துறையின் தலைமையிடத்து கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2018, ஜூன் மாதத்தில் இருந்து, 2020 ஜூலை வரை, மதுரை போலீஸ் கமிஷனராக இருந்தார். டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி ஏற்ற பின், 2019, ஜூன் மாதம், மதுரையில் இருந்து போலி பாஸ்போர்ட் வாயிலாக, இலங்கைக்குச் செல்ல முயன்ற முத்துராமன் என்பவர், குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கினார். பின், 2020, ஜனவரியில், துபாய்க்கு செல்ல முயன்ற பரமசிவம் என்பவரையும் கைது செய்தனர்.

விசாரணையில், சென்னை, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில், போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பல் செயல்படுவது தெரியவந்தது. இதுகுறித்து, தமிழக ‘கியூ’ பிரிவு மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்தனர். அப்போது, 200க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்கள் வாயிலாக, பாஸ்போர்ட் வழங்கப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக, ஏஜென்ட்களின் அலுவலகங்களில் சோதனை நடத்தி, 178க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்தனர்.

இவற்றில், 58க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்கள், இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு தயாரிக்கப்பட்டதும் தெரியவந்தது. இதற்கு முன், போலி பாஸ்போர்ட் வாயிலாக, இலங்கையைச் சேர்ந்த மர்ம நபர்கள், வெளிநாடுகளுக்கு சென்றதும் கண்டறியப்பட்டது. இந்த போலி பாஸ்போர்ட் விவகாரம் பின்னணியில், மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் இருப்பதும் தெரியவந்தது.

தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் அவர், உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.  அவரின் கட்டுப்பாட்டில் தான், எஸ்.பி.சி.ஐ.டி., மற்றும் ‘கியூ’ பிரிவு இருந்தன. இதனால், முறைகேடு தொடர்பாக அவரை விசாரிக்க, நெருங்க கூட முடியவில்லை.

இந்த பிரச்னை சம்மந்தமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்தினார்.  மதுரை அவனியாபுரம் போலீஸ் ஸ்டேசனில் மட்டும், போலி ஆவணங்கள் வாயிலாக, 54 பேருக்கு பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டேவிட்சன் தேவாசீர்வாதம் கொடுத்த அழுத்தம் காரணமாக, அவர் கீழ் பணிபுரிந்த போலீஸ் அதிகாரிகள், போலி ஆவணங்களை இணைத்து, பாஸ்போர்ட் கோரிய விண்ணப்பம் குறித்து ஆய்வு செய்தது போல ஒப்புதல் அளித்துள்ளனர்.  இது சம்மந்தமான வழக்கை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்ற வேண்டும் என்றும்,  சம்பந்தப்பட்ட போலீஸ்  அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியதும், அதை தொடர்ந்து பாஜக சார்பில், கவர்னர் ஆர்.என்.ரவியிடம் மனுவும் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ‘முறைகேட்டில் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு நேரடி தொடர்பு இல்லை. அவர் குற்றமற்றவர்’ என உத்தரவிட்டது.

இதனால், அவர் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். ‘என் கைகள் சுத்தனமானவை. துளியும் சம்பந்தம் இல்லாத குற்றச்சாட்டுகள் தினமும் என்னை கொல்கின்றன. என் குடும்பத்தினரும் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். விருப்ப ஓய்வு பெற்று சென்று விடலாம் என நினைக்கிறேன்’ என புலம்பி வந்தார். ஆனாலும் சென்னை போலீஸ் கமிஷனர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வந்தார்.

இந்நிலையில் பத்திரிகையாளர் வராகி என்பவர் போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மே 24ல் புகார் அனுப்பினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ’டேவிட்சன் தேவாசீர்வாதம் ‘பவர்புல்’ பதவியான உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ளார். போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக அவரிடம் எஸ்.பி.சி.ஐ.டி. மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரிக்கவே இல்லை.

அவர் மதுரை கமிஷனராக இருந்தபோது அவரது மனைவி ஜுனிதா எபினேசர் சென்னை நெற்குன்றம் பெருமாள் கோவில் தெருவில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புதல் மற்றும் சுற்றுலா அழைத்துச் செல்லும் நிறுவனம் நடத்தினார். இந்த நிறுவனம் வாயிலாக தான் முறைகேடு நடந்துள்ளது. மனைவிக்காக போலி ஆவணங்கள் வாயிலாக இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க டேவிட்சன் தேவாசீர்வாதம் ஏற்பாடு செய்துள்ளார். அதற்காக தனக்கு கீழ் பணிபுரிந்த மதுரை நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சிவகுமார் உள்ளிட்டோருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

ஒரு பார்போஸ்ட் ஆய்வு தொடர்பாக காலை 10:00 மணிக்கு அவரின் கவனத்திற்கு வருகிறது. 10:10 மணிக்குள் ஆய்வு முடிந்து பாஸ்போர்ட் அலுவலகத்தற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  போலி ஆவணம் வாயிலாக பாஸ்போர்ட் பெற்றவர்கள் பயங்கவாதிகளாக இருக்கலாம். இதனால் டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு ஜூன் 14ல் அனுப்பியுள்ள கடிதத்தில் ‘டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.  இதற்கிடையே போலி பாஸ்போர்ட் புகார்தாரரான வராகியிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அமைச்சரவை மாற்றம், அதை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் என அடுத்தடுத்து மாற்றம் செய்யும் முதல்வர் ஸ்டாலின்.  மாணவி ஸ்ரீமதி விவகாரம் தொடங்கி, அமலாக்கத்துறை ரெய்டு, திடீர் போராட்டங்கள் என தமிழகத்தில் நடந்த பல பிரச்னைகளுக்கு உளவுத்துறையின் தோல்வி தான்  காரணம் என  விமர்சனங்கள் எழுந்த நிலையில் உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் ஜூன் 27 அன்று பணியிட மாற்றம் செய்ததை தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை முதல்வர் ஸ்டாலின்.

டிரன்ஸ்வர் செய்யப்பட்ட 2 நாட்களுக்குள் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அவரது மனைவி மீது  என்.ஐ.ஏ விசாரணை நடத்தியிருப்பது திராவிட மாடல் முதல்வரின் தூக்கத்தை மேலும் கெடுத்து விட்டது என்றும், சென்னை போலீஸ் கமிஷனராக ஆக வேண்டும் என்ற டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் கனவும் தகர்ந்தது’ என்றும் அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top