ஊழலுக்கு எதிரான மத்திய அரசின் அமலாக்கத் துறை

நாடு முழுவதிலும் பொருளாதார குற்றங்கள் மற்றும் அந்நியச் செலவாணி குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவும் 1956-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு மத்திய அமலாக்கத்துறை. மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் கீழ் இது ஒரு தேசிய அமைப்பாக செயல்படத் தொடங்கியது.

டெல்லியில் அமைந்த அதன் அலுவலகத்தின் தலைமை பொறுப்பில் சட்டம் அறிந்த ஓர் அதிகாரியும் அவருக்கு உதவியாக ரிசர்வ் வங்கியில் இருந்து 2 அதிகாரிகள் அயல் பணியிலும் அமர்த்தப்பட்டனர். இத்துடன், சிறப்புக் காவல் பிரிவின் 3 ஆய்வாளர்களும் பணியில் இருந்தனர்.

ஒரு வருடத்தில் இந்த அமைப்பு, மத்திய அமலாக்கப் பிரிவு எனப் பெயர் மாற்றம் கண்டது. தொடர்ந்து, அதன் சட்டங்களில் பலவித திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. தற்போது இந்த பிரிவு, நிதி மற்றும் வருவாய் துறையின் கீழ் செயல்படுகிறது. சுமார் 40 ஆண்டுகள் வரை இருக்கும் இடம் தெரியாமல் அமலாக்கப் பிரிவு இருந்தது. அதன்பிறகு புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவுகளின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பிரபலமானது.

மத்தியில் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின் அமலாக்கத்துறைக்கு ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரம் வழங்கி 2018ல் முக்கிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.  இந்த சட்ட திருத்தத்தங்களுக்கு பின் 5 பணிகள் இதன் முக்கியப் பணிகளாக உள்ளன. சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டம் 2002 (பிஎம்எல்ஏ), அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (பெமா), தலைமறைவு பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் 2018 (எப்இஓஏ), அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை சட்டம் 1973 (பெரா), காபிபோசா சட்டம் 1974 ஆகியவற்றை அமல்படுத்துவது அதன் பணியாக உள்ளது.

இதில், பிஎம்எல்ஏ சட்டமானது சர்வதேச அளவில் எடுத்த முடிவுகளால், இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் அமலாகி உள்ளது. இதில் முக்கியப் பிரிவுகள் சேர்க்கப்பட்ட பிறகுதான் அதன் பிடியில் அரசியல்வாதிகளும் சிக்கத் தொடங்கினர்.

இதன்படி, கடந்த ஜனவரி 31 வரை மொத்தம் 33,958 வழக்குகள் அமலாக்கப் பிரிவால் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இதில் 16,148 வழக்குகளில் விசாரணை முடிந்துள்ளது. 8,440 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 6,847 வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிஎம்எல்ஏ, பெமா, எப்இஓஏ ஆகிய மூன்று சட்டங்களின் கீழ் 5,906 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் எம்.பி., எம்எல்ஏ மற்றும் எம்எல்சி.க்கள் மீது 2.98 சதவீத வழக்குகள் (176) உள்ளன. இந்த 176-ல் 96 சதவீத வழக்குகளில் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளிடம் இருந்து ரூ.36.23 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தண்டனைகளுடன் ரூ.4.62 கோடிக்கு அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.

பிஎம்எல்ஏ வழக்குகளில் ரூ.71,290 கோடி மதிப்புள்ள1,632 சொத்துகள் பறிமுதலாகி உள்ளன. மேலும் ரூ.40,904 கோடி மதிப்பிலான 260 சொத்துகளின் பறிமுதல் நீதிமன்ற ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top