மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு சாத்தியமா? பா.ஜ.க நிலைபாடு என்ன?

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர்  தமிழக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள். ஏற்கனவே இது தொடர்பாக மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தன்னுடைய தெளிவான பதிலை கூறியிருக்கிறது. குறிப்பாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளின் சமூக நிலையைக் கண்டறிய அக்டோபர் 6, 2022 அன்று 3 பேர் கொண்ட தேசிய ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.  உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இந்த ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் சுஷ்மா யாதவ் மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ரவீந்தர் குமார் ஆகியோர் இந்த ஆணையத்தின் மற்ற இரண்டு உறுப்பினர்கள். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு, பட்டியல் வகுப்பினர் என்ற அந்தஸ்தை வழங்கலாமா? என்று இந்த ஆணையம் ஆய்வு செய்து இரண்டு ஆண்டு காலத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

2007-ஆம் ஆண்டு “மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம்” என ரங்கநாத்மிஸ்ரா ஆணையம் அறிக்கை தாக்கல் செய்த நிலையில், தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, அதன் பின் ஏழு வருடங்கள் ஆட்சியில் இருந்தும், அந்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏன் அமல்படுத்வில்லை என்ற கேள்வி எழாமல் இல்லை.

இஸ்லாமும், கிறிஸ்தவமும் சாதி பாகுபாட்டை கடைபிடிப்பதில்லை எனவே அவர்களுக்கு பட்டியலின அந்தஸ்து தேவை இல்லை என 27% OBC இடஒதுக்கீட்டை உறுதி செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திரா சாவ்னி தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதுவே இந்திய அரசின் கொள்கையாக இன்று வரை தொடர்கிறது.


இந்த விவகாரம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு 2022 அக்டோபர் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்திய நிலையில், ஆணையம் அமைக்கப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. “மதம் மாறிய கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு தலித் பட்டியலில் இட ஒதுக்கீடு தருவதன் மூலமாக அவர்கள் உண்மையிலேயே பயன் பெறுவார்களா?” என்பது முதல் கேள்வி. இவர்களுக்கு இந்த பட்டியலில் இடம் கொடுப்பதன் மூலமாக ஏற்கனவே பட்டியலின மக்களான இந்துக்கள் எஸ்.சி பிரிவினர் இதனால் பாதிக்கப்படுவார்களா? என்பது அடுத்த கேள்வி. தற்போதைய ஆணையம் இந்த இரண்டு கேள்விகளையும் தரவுகளுடன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கிறது.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் விருப்பப்படி, இந்திய அரசியல் சாசன பிரிவு 341 கீழ் 1950-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் விடுத்த ஆணைப்படி, இந்து தலித்துகளுக்கு மட்டுமே பட்டியல் சாதி அந்தஸ்து வழங்கப்பட்டது. சீக்கிய தலித்துகள் 1956-ஆம் ஆண்டிலும், பௌத்த தலித்துகள் 1990-ஆம் ஆண்டிலும் பட்டியல் சாதி அந்தஸ்தைப் பெற்றனர். சீக்கிய தலித்துகளுக்கு காக்கா காலேல்கர் கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையிலும், 1983ல் அமைக்கப்பட்ட கமிட்டியின் அடிப்படையில் பெளத்த தலித்துகளுக்கும் இந்த அந்தஸ்து கிடைத்தது.
இஸ்லாமும், கிறிஸ்தவமும் சாதி பாகுபாட்டை கடைபிடிப்பதில்லை எனவே அவர்களுக்கு பட்டியலின அந்தஸ்து தேவை இல்லை என 27% OBC இடஒதுக்கீட்டை உறுதி செய்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திரா சாவ்னி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதுவே இந்திய அரசின் கொள்கையாக இன்று வரை தொடர்கிறது.
கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தலித்துகளுக்கு பட்டியல் சாதி அந்தஸ்து வழங்கினால், அது தங்கள் உரிமைகளை பறிப்பது போன்றது என்று இந்து தலித்துகள் நம்புகிறார்கள். இந்து மதத்தை மட்டும் குறிவைத்து கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பும் உரிமைகளும் மதம் மாறிய பிறகும் கிடைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் ஒன்றை முதல்வர் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது உள்நோக்கம் கொண்ட வாக்கு வங்கி அரசியல் என்பதோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என இந்த சட்டப்பேரவையில் தீர்மானத்திற்கு எதிராக தமிழக பா.ஜ.க வாதிடுகிறது.
2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த 5 மாதங்களிலேயே மதம் மாறியவர்களுக்காக இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் அமைக்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டு “மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம்” என அந்த ஆணையம் அறிக்கை தாக்கல் செய்த நிலையில், தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, அதன் பின் ஏழு வருடங்கள் ஆட்சியில் இருந்தும், அந்த அறிக்கையின் பரிந்துரைகளை ஏன் அமல்படுத்தவில்லை என்ற கேள்வி எழாமல் இல்லை.
நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ மதங்களில் தீண்டாமை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளதை முதல்வர் மு.க.ஸ்டாலினும் அந்த மதத்தினரும் ஏற்றுக் கொள்வார்களா? இதுவரை இந்து மதத்தில் மட்டுமே தீண்டாமை இருந்ததாகக் கூறி இழிவுபடுத்தி வந்தவர்கள் வருத்தம் தெரிவிப்பார்களா? கிருஸ்தவ, இஸ்லாமிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வழக்கு கடந்த இருபது வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிற நிலையில், தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த தனித்தீர்மானம் மதங்களுக்கிடையே பிளவை உருவாக்கவே வழிவகை செய்யும். சாதிகளே இல்லை என்று முற்போக்கு வேடம் போடும் கபடதாரிகள், மதங்களில் ஓட்டுக்காக சாதிய இட ஒதுக்கீடு கேட்டு மக்களை தூண்டிவிடும் போக்கு வாக்கு வங்கி அரசியலை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது.
ஏற்கனவே உச்ச நீதிமன்ற மேற்பார்வையிலும், ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும் இருக்கும் ஒரு விஷயம் குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழக அரசு, இது குறித்து தற்போதைய மத்திய அரசு எடுத்த முன்னெடுப்புகள் குறித்து குறிப்பிடாமல் இருப்பது அறமற்ற செயல். இத்தீர்மானம் சம்பந்தமாக ஆணையம் அடுத்த ஒன்றரை ஆண்டுகள் கழித்து தனது அறிக்கையை சமர்பித்த பிறகே முடிவு எடுக்க முடியும் என்பதே யதார்த்தம். அதை தற்போதே தீர்மானமாக நிறைவேற்றி நீட் போன்றதொரு அற்ப அரசியலை முன்னெடுக்க தி.மு.க திட்டம் போடுவது போல தெரிகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண முனையும் ஆணையத்தின் பரிந்துரைகளை மையமாக கொண்டு பிற்காலத்தில் பிரதமர் மோடி அரசு இந்த விஷயத்தில் தெளிவான, நிரந்தர முடிவை எடுக்கும். இந்நிலையில், மக்களை குழப்பி, திசை திருப்பும் அற்ப அரசியலை தி.மு.க அரசு கையில் எடுத்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது, அற்பத்தனமானது.

– எஸ்.ஜி.சூர்யா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top