2024 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம்; தலைவர் அண்ணாமலை

சென்னையில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கர்நாடகா தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலாவது: கர்நாடகா பாஜக தொண்டர்கள் தேர்தலில் மிக கடுமையாக வேலை செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி மீது கர்நாடக மக்கள் வைத்துள்ள அன்பு எள்ளளவும் குறையவில்லை. அதை 2024 மக்களவை தேர்தலில் நாம் உணர்வோம். கர்நாடகாவில் பாஜக மிகக் கடினமான பாதையை கடந்து வந்திருக்கிறது.1983ல் இரண்டு, மூன்று எம்எல்ஏக்களுடன் கணக்கை தொடங்கி பிறகு ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

கர்நாடகாவில் இதுவரை பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த வரலாறு இல்லை. மேலும் 1985 க்கு பிறகு எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததில்லை. இந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், இரண்டாவது முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற திட்டமிட்டு பணியாற்றினோம். அந்த சாதனையை முறியடிக்கவும் முயற்சி செய்தோம். ஆனால் இந்த முறை காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் நான்கு சதவீத வாக்குகள் காங்கிரசுக்கு சென்றுள்ளன. 38 சதவீதமாக இருந்த காங்கிரஸ் வாக்கு எண்ணிக்கை 43 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதே சமயத்தில் எடியூரப்பா, ஈஸ்வரப்பா போன்ற மூத்த தலைவர்கள் யாரும் இல்லாமல் பாஜக தேர்தலை சந்தித்தது. கர்நாடகா மக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஐந்து மிகப்பெரிய வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஆண்டுதோறும் ரூ.65,000 கோடி முதல் ரூ. 70,000 கோடி வரை தேவைப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் தெரிவித்திருந்தோம். இதனால் காங்கிரசுக்கு இன்று முதலே சவால் தொடங்குகிறது.

தேர்தலில் வெற்றி தோல்வி எல்லாம் வழக்கம்தான். கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலிலும் கடுமையாக பிரசாரம் செய்தோம். அங்கேயும் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகிய தேசிய தலைவர்கள் கடுமையாக பிரச்சாரம் செய்தனர். அங்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆனால் தேர்தல் முடிவில் அங்கேயும் பாஜக எதிர்க்கட்சியாகவே அமர்ந்தது. அதையும் ஏற்றுக் கொண்டு வேலை செய்தோம். அதற்கு அடுத்து வந்த பல தேர்தல்களில் வெற்றி பெற்றோம். கோவா, மணிப்பூர், மிசோரம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வெற்றி பெற்றோம். ஆரோக்கியமான ஜனநாயகத்தில் தேர்தல் முடிவுகள் மாறி மாறி வருவது இயல்பான ஒன்று தான். பிரதமர் மோடி மீது கர்நாடக மக்களுக்கு மிகுந்த அன்பு உள்ளது. அதன் விளைவாகவே பெங்களூருவில் 16 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. உடுப்பி மாவட்டத்தில் ஐந்து பாஜக வேட்பாளர்களில் மூன்று பேர் மாற்றப்பட்டனர். ஐந்து தொகுதிகளிலும் பாஜக வென்றுள்ளது.

பெங்களூருவை பொறுத்தவரை தமிழர்களுடைய வாக்குகள் மிகவும் முக்கியமானது. குறிப்பாக காந்திநகர், சாந்தி நகர், சிவாஜி நகர், ஜெயநகர், விஜயநகர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் 30% பேர் இருக்கின்றனர். கடந்த முறை ஜெய நகர் தொகுதியில் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோற்றது. இந்த முறை ஜெய நகரில் கடுமையாக போராடி 16 வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளோம். காந்தி நகரில் கடந்த முறை பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோற்றது. இந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தொகுதியை பறிகொடுத்துள்ளது.

பொதுவாக ஒரு மாநிலத்தின் தலைவரை மற்றொரு மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்க மாட்டார்கள். ஆனால் தேசிய தலைமை எனக்கு இத்தகைய அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. என்னை பொறுத்தவரை இது ஒரு பாடம். ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பது எப்படி ?. பல்வேறு பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி ?. என கற்றுக் கொண்டேன். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில், 40 தொகுதிகளில் பாஜக அதிருப்தியாளர்கள் போட்டியிட்டனர். அதை எப்படி சமாளிக்க வேண்டும். 40 கி.மீ பிரதமர் மோடி பெங்களூருவில் பேரணி சென்ற போது அதை எப்படி திட்டமிட வேண்டும். வரும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிக்க வேண்டும் உள்ளிட்டவற்றை கற்றுக் கொண்டேன். இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தால் அது பெரிய சகாப்தமாக ஆகியிருக்கும்.

கர்நாடகா தேர்தல் வரலாற்றை பொறுத்தவரை மாநிலத்தில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ, அது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாது. 2013 கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வென்றது. 2014 தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். 2018ல் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஆட்சி அமைத்தது. 2019ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவ்வாறு பார்க்கையில் இந்த தேர்தல் முடிவுகளும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நேர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். மேலும் இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top