பச்சை பட்டுடுத்தி ‘கள்ளழகர்’ வைகை ஆற்றில் எழுந்தருளினார்: லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்!

மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (23.04.2024) காலை 6 மணியளவில் வைகை ஆற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி எழுந்தருளினார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.

உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ள கோவில் மாநகரமாகிய மதுரையில் ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழா ,ஏப்ரல் மாதம் 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 23 வரை 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் மீனாட்சியம்மன் கோவில், கள்ளழகர் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சித்திரை திருவிழா நாட்களில் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கடந்த ஏப்ரல் 19ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், அடுத்த நாளாகிய ஏப்ரல் 20ல் மீனாட்சி திக் விஜயமும் நடந்தது. ஏப்ரல் 21ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. அந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 22ல் நடந்த தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்காக 21ம் தேதி கள்ளழகர் கோவிலில் இருந்து அழகர் புறப்பட்டார். கள்ளழகருக்கு மூன்று மாவடியில் ஏப்ரல் 22ம் தேதி எதிர் சேவை நடந்தது. மதுரை நகர் நோக்கி வரும் கள்ளழகரை, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்வை கள்ளழகர் எதிர் சேவை என்று அழைக்கிறார்கள்.

மறுநாள் ஏப்ரல் 23ம் தேதியன்று புறப்பட்டு வைகை ஆற்றில் எழுந்தருள்வதற்கு முன்பாக வீரராகவப் பெருமாள் வெள்ளிக் குதிரையில் அமர்ந்து அழகரை வரவேற்றார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்கு முன்பாக ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அழகர் அணிந்து கொண்டார். ஆற்றின் மையப் பகுதியில் அமைந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து விழாவின் மணிமகுட நிகழ்வாக கள்ளழகர் இன்று ஏப்ரல் 23ம் தேதி காலை 6 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் வலம் வந்து வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய போது ‛கோவிந்தா கோவிந்தா’ என்று பக்தர்கள் பரவசத்துடன் கோஷமிட்டனர். பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது.

நாளை 24ம் தேதி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு பின்னர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சியும் பின்னர் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். ஏப்ரல் 26ம் தேதி அழகர் பூபல்லக்கில் அழகர்மலைக்கு திரும்புதல் வைபவம் நடக்கிறது.

தமிழகம் எப்போதும் ஆன்மீகம் மண் என்பதற்கு மதுரையில் இன்று கூடிய லட்சக்கணக்கான பக்தர்களே சாட்சி. சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறியவர்கள் இதை பார்த்தால் வயிறு எரியத்தானே செய்யும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top