செயற்கை மழை திட்டத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கும் யு.ஏ.இ.!

மழையை மிக அபூர்வமாக பார்க்கும் பாலைவன நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில், இதுவரை இல்லாத வரலாற்று அளவு மழை பெய்ததால், விமான நிலையம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

மேற்காசியாவில் உள்ள வளைகுடா நாடுகளில் பெரும்பாலான பகுதிகள் பாலைவனமாக உள்ளன. எண்ணெய் வளம் அதிகம் உள்ள இந்த நாடுகளில், மழை என்பது மிகவும் அபூர்வமாகவே பெய்யும். அதிலும், குளிர்காலத்தில் ஒரு சில நாட்களில் பெய்யும்.

யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகள், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் வாயிலாக தண்ணீரை பெற்று வருகின்றன.

நிலத்தடி நீரை தக்க வைக்க, அடிக்கடி இந்த நாடுகள், ‘கிளைவுட் சீடிங்’ எனப்படும் மேகவிதைப்பு முறையை பயன்படுத்துகின்றன. இந்த திட்டத்தின்படி, குறிப்பிட்ட ரசாயனப் பொருட்களை மேகத்தில் தூவுவதன் வாயிலாக மழையைப் பெறுகின்றன.

இது இந்த பிராந்தியத்தில் ஒரு வழக்கமான நடைமுறை. இதன்படி, யு.ஏ.இ., அரசு சில தினங்களுக்கு முன்பு, செயற்கை மழையை பெய்விக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஏழு விமானங்கள் வாயிலாக ரசானயங்கள் தெளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பிராந்தியத்தில், 16ம் தேதி பெரும் புயல் வீசியது. இதன் தாக்கத்தில், யு.ஏ.இ., பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்டவற்றில் பெரும் மழை பெய்தது. ஆனால், யு.ஏ.இ.,யில் இதன் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.

யு.ஏ.இ.,யில் வழக்கமாக ஓர் ஆண்டில், 9.47 செ.மீ., அளவுக்கு மழை பெய்யும். ஆனால், நேற்று முன்தினம் இரவு வரையிலான, 24 மணி நேரத்தில், 14.2 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது.

குறிப்பாக துபாய் விமான நிலையம் ஒட்டிய பகுதியில் அதிக அளவுக்கு மழை பெய்தது.

இதனால், விமான நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையம் இதனால் மூடப்பட்டது. விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டன. விமானத்தில் பயணிப்பதற்காக புறப்பட்ட மக்களும், நடுவழியில் மழை வெள்ளத்தில் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். விமான நிலையத்தில் உள்ளவர்களும் வெளியேற முடியாமல் தவித்தனர்.

கடந்த, 1949ம் ஆண்டில் இருந்து, யு.இ.ஏ.,யில் மழை தொடர்பான தகவல்கள் உள்ளன. இந்த புள்ளிவிபரங்களில் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

செயற்கை மழை முயற்சிதான் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எப்போதாவதுதான் மழை பெய்யும் என்பதால், யு.ஏ.இ.,யில் மழைநீர் வடிகால் வசதிகள் கிடையாது. இதனால், இந்த பெருமழையை சமாளிக்க முடியாமல், சாலைகளில் மழைவெள்ளம் சூழ்ந்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top