பா.ஜ.க., ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர்: ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி!

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர் என ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அங்கு பயங்கரவாதிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் சென்றுள்ளார். விமானம் மூலம் காஷ்மீரின் ஸ்ரீநகர் சென்ற பிரதமர் அங்கிருந்து ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைத்தளத்திற்கு சென்றார். அங்கு போர் நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீநகரின் பக்ஷி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். ஜம்மு காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் பக்சி ஸ்டேடியத்தில் வளர்ச்சி அடைந்த பாரதம், வளர்ச்சி அடைந்த ஜம்மு காஷ்மீர் என்ற தலைப்பில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:

உங்கள் இதயங்களை வெல்லவே காஷ்மீர் வந்துள்ளேன். பாஜக ஆட்சியில் 140 கோடி இந்தியர்களும் அமைதியாக வாழ்கின்றனர். நாட்டின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது.

சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் ஜம்மு-காஷ்மீரில் ஒரு தலைமுறைக்கான காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய காஷ்மீருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தோம்.

உங்களது மலர்ந்த முகங்களை பார்க்கும்போது 140 கோடி மக்களும் திருப்தி அடைவார்கள். அனைத்து வாக்குறுதிகளையும், திட்டங்களையும் நிறைவேற்றி காஷ்மீர் மக்களின் இதயங்களை நிச்சயம் வென்றெடுப்பேன். காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மோடியின் கியாரண்டி ஆகும்.

‘‘இப்போது எனது அடுத்த பணி ‘வெட் இன் இந்தியா’ .மக்கள் ஜம்மு காஷ்மீர் வந்து தங்கள் திருமணங்களை நடத்த வேண்டும். ஜம்மு காஷ்மீரில் ஜி20 மாநாடு எப்படி ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை உலகம் பார்த்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் சுற்றுலாவிற்கு யார் செல்வார்கள் என்று மக்கள் சொல்லும் காலம் இருந்தது. இன்று, ஜம்மு காஷ்மீர் சுற்றுலா அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில், 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளனர். இப்போது உலகம் முழுவதிலுமிருந்து பெரிய பிரபலங்களும் ஜம்மு காஷ்மீருக்கு தைரியமாக வருகிறார்கள்.

வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றப்பட்டிருப்பட்டிருப்பதன் மூலம் பல்வேறு வாய்ப்புகளுக்கான மாநிலமாக காஷ்மீர் மாறியுள்ளது. சுற்றுலாத்துறை வளர்ச்சி மூலம் காஷ்மீரின் பொருளாதாரம் முன்னேறும், வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top