விடியாத திமுக ஆட்சியின் அவலம்..  தமிழகத்தின் ஒரே மாவட்டத்தில் 1,448 மைனர் பெண்களுக்கு பிரசவம்! நடவடிக்கை எடுப்பது எப்போது?

கடந்த 2021 ஜனவரி முதல் 2023 அக்டோபர் வரையிலான 34 மாதங்களில் 18 வயதுக்கும் குறைவான பெண்கள், ஆயிரத்து 448 குழந்தைகளை பிரசவித்துள்ளனர். இதில் ஆயிரத்து 101 பிரசவங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்துள்ளன. 347 குழந்தைகள், மாவட்ட தலைமையகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்துள்ளன. பிரசவித்த தாய்மார்கள் எல்லோருமே திருமணமானவர்கள்.

இதெல்லாம் ஏதோ, கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடக்கவில்லை.

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று பாரதி பாடிய, ‘ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கிறோம்’ என்று பெருமிதப்படும், கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நீதியில் முன்னேறிய மாநிலம் என்று சொல்லப்படும் தமிழகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் நடந்து வரும் சோகம்.

18 வயதுக்கு கீழே திருமணம் நடந்தால் அதற்கு பெயர் குழந்தைத் திருமணம். அது குற்றம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், அந்த சட்ட மீறல், மிகவும் வெளிப்படையாக, அரசுக்கு தெரிந்தே நடக்கிறது. அதனுடைய விளைவான குழந்தை பிறப்பும், அரசு மருத்துவமனைகளிலேயே நடக்கிறது. ஆனால், இந்த சட்ட மீறலை தடுக்க வேண்டிய அரசுத்துறைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது.

சிதம்பரம் தீட்சிதர் வீட்டில் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக புகார் எழுப்பி, அதை, டெல்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்தை போன்று தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்திபோல் பேசிப் பேசி மாய்ந்த காட்சி ஊடகங்களும், பெண்ணியவாதிகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று அடுக்கடுக்காக கேள்விகள் எழுகின்றன.

இதுபோன்ற குழந்தைத் திருமணங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று வறுமை, அடுத்தது, சமூக சூழல். இந்த இரண்டும்  திருநெல்வேலி மாவட்டத்தில் மிக மோசமாக இருக்கின்றன என்பது இதன் மூலம் புரிகிறது.

இதற்கு, கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகரித்த கல்வி இடைநிற்றல் போன்றவைதான் காரணங்கள் என்று சொல்லி, புண்ணுக்கு புனுகுபூசி மறைக்கப் பார்க்காமல், அரசும், அரசு எந்திரமும் சமூக அறுவை சிகிச்சைக்கு தயாராக வேண்டும்.

இவ்வாறு தினமலர் திருச்சி பதிப்பு 16.02.2024 அன்று தலையங்கம் வெளியிட்டுள்ளது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top