ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா மற்றும் தியா குமாரி, பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.

ராஜஸ்தானில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 115 இடங்களில் வெற்றி பெற்று ஊழல் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. காங்., 69 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து ஆட்சியமைக்கும் பணிகளை பாஜக தொடங்கியது.

முதல்வர் தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல் முறை எம்.எல்.ஏ.வான பஜன்லால் சர்மா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

வித்யாதர் நகர் எம்.எல்.ஏ. தியா குமாரி, துடு தொகுதி எம்.எல்.ஏ. பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் துணை முதல்வர்களாகவும், அஜ்மீர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., வாசுதேவ் தேவ்னானி சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பாஜக அரசு பதவியேற்பு விழா ஜெய்ப்பூரில் உள்ள ராம்நிவாஸ் கார்டனில் இன்று (டிசம்பர் 15) நடைபெற்றது. விழாவில் பஜன்லால் சர்மா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தியா குமாரி, பிரேம் சந்த் பைர்வா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புதிய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top