அவதூறுகளை பரப்பும் வெறுப்பாளர்கள்: தலைமை பண்பை வெளிப்படுத்திய தலைவன்!

140 கோடி இந்தியர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த கிரிக்கெட் உலகக்கோப்பை பைனலில் இந்திய அணி தோல்வியை தழுவியது. லீக் போட்டிகளில் இந்திய வீரர்கள் காட்டிய அதிரடி, ஆஸ்திரேலியா உள்பட அனைத்து ஜாம்பவான்களையும் பந்தாடிய விதம் உள்ளிட்டவை இந்த முறை கப்பு நமக்கு தான் என்ற உணர்வை இந்தியர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது.

இதனால் பைனலில் இந்தியா அடைந்த தோல்வி என்பது அவ்வளவு எளிதாக ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. போட்டி நடைபெற்ற நரேந்திர மோடி மைதானத்திலும், பல்வேறு நகரங்களிலும் ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது போல கடந்து போக வேண்டும் என்பது தான் நமது எண்ணம். ஆனால் இந்த தோல்வியை வைத்து பிரதமர் மோடியை அவதூறாக விமர்சிப்பவர்களுக்கானது தான் இந்த கட்டுரை…

சக இந்தியர்கள் எப்படி நீல ஜெர்சியுடன் மைதானத்துக்கு வந்தார்களோ அதைப் போலவே பிரதமர் மோடியும் நீல வண்ண ஆடை அணிந்து மைதானத்திற்கு வருகை தந்திருந்தார். இந்திய வீரர்களின் ஜெர்சியில் இருக்கும் ஆரஞ்சு நிற கோடு பிரதமர் மோடியின் உடையிலும் இருந்தது. இந்தியாவின் வெற்றியை கொண்டாடும் ஒரு ரசிகனின் மனநிலையை அவரது உடை பிரதிபலித்தது. ஆனால் முடிவுகள் எதிர்பார்த்தற்கு மாறாக வர, இக்கட்டான சூழலில் ஒரு தலைவன் எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட்டார். உங்கள் மீது இந்தியாவுக்கு நம்பிக்கை உள்ளது என்ற அவரது டிவிட் தான் இந்திய அணிக்கு முதல் ஆறுதல்.

அதற்கு அடுத்ததாக வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்டு மார்லெஸ் ஆகிய இருவரும் இணைந்து கோப்பையை வழங்கினர். ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்சுடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி, கீழே இறங்கி அங்கிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவருடனும் கைகுலுக்கினார். ஆனால் பிரதமர் மோடியின் இந்த வீடியோவை எடிட் செய்து, பேட் கம்மின்சுடன் கைகுலுக்காமல் பிரதமர் நரேந்திர மோடி சென்று விட்டதாக பொய் செய்திகளை உடன்பிறப்புகள் உள்ளிட்ட விஷமிகள் பரப்பி வருகின்றனர்.

அடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி மைதானத்துக்கு வந்தது தான் தோல்விக்கு காரணம் என இந்த உடன்பிறப்பு கும்பல் விமர்சித்து வருகிறது. சந்திரயான் -2 நிலவின் தரையில் விழுந்த போதும் அந்த கும்பல் இப்படி தான் பிதற்றியது. ஆனால் பிரதமர் மோடி, அந்த சமயத்தில் தோல்வியால் துவண்டு போயிருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறியது மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது.

சந்திரயானை விண்ணில் செலுத்துவதாக இருந்தாலும் சரி, உலகக்கோப்பை இறுதி போட்டியாக இருந்தாலும் சரி, வெற்றி தோல்வி எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை நன்கு அறிந்தே பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

வெற்றியடைந்தால் வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது, தோல்வி ஏற்பட்டால் அதனை பகிர்ந்து கொள்வது இந்த இரண்டுக்கும் அவர் தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தார். அதனால் தான் இந்திய வீரர்களுக்கு அவரால் உள்ளத்தில் இருந்து எழுந்த வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடிந்தது. வீரர்களின் அறைக்கே சென்று அவர்களின் வருத்தத்தை பகிர்ந்து கொள்ள முடிந்தது. இவையெல்லாம் புரியாமல் எல்லா விவகாரங்களையும் பிரதமர் மோடிக்கு எதிரான அரசியலாக மட்டும் பார்ப்பவர்கள், அங்கேயே நின்று தொடர்ந்து விமர்சித்து கொண்டே இருக்கட்டும். இதைப்போன்ற ஏராளமான விமர்சனங்களையும், அவதூறுகளையும் பார்த்து பழகிய அவர் அடுத்தடுத்த விஷயங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார். சந்திரயான் – 2 தோல்வியுற்ற 4 ஆண்டுகளில் சந்திரயான் -3 வெற்றி பெற்றது போல, 2023ல் விட்ட கோப்பையை 2027ல் இந்தியா கைப்பற்றும்.  வெற்றியிலும் தோல்வியிலும் என்றும் உங்களுடன் இருக்கிறோம். வாழ்த்துக்கள் டீம் இந்தியா!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top