ஆங்கிலேயர்களை விட மோசமாக நடக்கும் திமுக அரசு: 7 விவசாயிகள் தனித்தனி சிறைக்கு மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக, 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை திமுக அரசு கையகப்படுத்த முயன்றதை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்தது மட்டுமின்றி வெவ்வேறு சிறைக்கு மாற்றியது தற்போது அம்பலமாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, மேல்மா சிப்காட் திட்ட விரிவாக்க பணிக்காக மேல்மா, குரும்பூர், நர்மா பள்ளம், தேத்துறை, காட்டுக்குடிசை, நெடுங்கல் உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் இருந்து 3 ஆயிரத்து 174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்றும் முயற்சியில் விடியாத திமுக அரசு ஈடுபட்டுள்ளது.

விளையும் நிலங்களை அழிக்கும் திமுகவின் செயலுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூலை 2ம் தேதி முதல் சுமார் 125 நாட்களுக்குத் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக மேல்மா கூட்டுச்சாலையில் பந்தல் அமைத்து அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

ஆனால் விடியாத திமுக அரசு விவசாயிகளின் கோரிக்கையை செவி சாய்க்காமல் சிப்காட் அமைப்பதற்கான நிலத்தை கையகப்படுத்தும் முயற்சிலேயே ஈடுபட்டு வந்தது. இதனால் மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த நவம்பர் 2ம் தேதி செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். அப்போது விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதற்கிடையே மேல்மா சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தற்காக விவசாயிகள் மீது பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்தது விடியா திமுக அரசு.

அந்த வழக்கிற்காக கடந்த 4ம் தேதி 22 விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். மேலும் 7 விவசாயிகள் மீது மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கடந்த நவம்பர் 15ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அருள், வேலூர் சிறையில் மாசிலாமணி, பாக்கியராஜ், மதுரை சிறையில் பச்சையப்பன், திருச்சி சிறையில் திருமால், கோவை சிறையில் தேவன், கடலூர் சிறையில் சோழன் என தனித்தனியாக அடைக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை வேலூர் சிறையில் அடைக்கலாம். அதை விடுத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் சிறையில் அடைப்பதன் நோக்கம் என்ன? கடந்த காலங்களில் ஆங்கிலேயர்கள் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை தனிமைப்படுத்துவதற்காகவும், அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளக்கூடாது என்பதற்காக பல்வேறு சிறைச்சாலைகளில் தனித்தனியாக அடைத்து கொடுமைப்படுத்தினர். தற்போது அந்த நிகழ்வை விட மிக மோசமான முறையில் திமுக அரசு நடந்துக்கொள்கிறது.

விவசாய நிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி அமைதியான முறையில் போராடியவர்கள் மீது குண்டாஸ் போடப்பட்டிருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும். இனி வரும் காலங்களில் விவசாயிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்கள் விழித்துக்கொண்டால் மட்டுமே இதுபோன்ற திமுகவின் அராஜக ஆட்சியில் இருந்து விடுபட முடியும் என்பதற்கு விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டாஸ் சட்டமே எடுத்துக்காட்டாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top