எம்.பி.ஏ.,வில் கிருஷ்ணர் பாடம்: அலகாபாத் பல்கலையில் அறிமுகம்

உத்தர பிரதேசத்தில் அலகாபாத் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பி.பி.ஏ., எம்.பி.ஏ., படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பகவான் கிருஷ்ணர், சாணக்கியர் போன்றோரின் நிர்வாக திறமைகள் குறித்த பாடங்கள் இடம் பெற்றுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான அலகாபாத் பல்கலை அமைந்துள்ளது. இங்கு வணிகவியல் துறை சார்பில் நடப்பு கல்வி ஆண்டு முதல் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பி.பி.ஏ., எம்.பி.ஏ., படிப்பு துவங்கப்பட்டு உள்ளது.

இதில் முதல் ஆண்டுடன் ஒருவர் வெளியேறினால் ஓராண்டு சான்றிதழும், இரண்டாண்டுடன் வெளியேறினால் டிப்ளமா சான்றும் மூன்றாம் ஆண்டில் வெளியேறினால் பி.பி.ஏ., சான்றும் கிடைக்கும்.

இதனால் இப்படிப்பிற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஒருங்கிணைந்த பி.பி.ஏ., -எம்.பி.ஏ., படிப்பில் மாணவர்கள், பகவான் கிருஷ்ணர் கையாண்ட நிர்வாக மேலாண்மை குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

இவற்றை பகவத் கீதை, உபநிஷதங்கள் வாயிலாக மாணவர்கள் பயில உள்ளனர். சாணக்கியரின் நிர்வாக யுக்திகள் குறித்த பாடமும் சேர்க்கப்பட்டு உள்ளது. மேலும், நிர்வாகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது, மனதை அமைதிப்படுத்த அஷ்தங்க யோகாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

அத்துடன், முதல் முறையாக இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களான ஜெ.ஆர்.டி., டாடா, பிர்லா, அசிம் பிரேம்ஜி, திருபாய் அம்பானி ஆகியோரின் புத்திசாலித்தனமான நிர்வாக முடிவுகளையும் பாடமாக தொகுத்துள்ளனர்.

இந்த முடிவுகளுக்காக உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கல்வியாளர்கள் பலரும் பாராட்டுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top