இஸ்ரேல் – ஹமாஸ் போர்: ஐ.நா. தீர்மானத்தை நிராகரித்த இந்தியா!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக அரபு நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா நிராகரித்தது.

காஸாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இதன் பின்னர் காஸமீது அதிரடியாக போர் நடத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார். அதன்படி கடந்த 7ம் தேதி முதல் தற்போது வரை காஸா மீது இஸ்ரேல் அசுரத் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் சில  பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அவசரக் கூட்டம்  நடைபெற்றது. இதில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி, அரபு நாடுகள் சார்பில் ஜோர்டான் அரசு வரைவுத் தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்துக்கு ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 40 நாடுகள் உத்தரவாதம் அளித்தன.

இந்த தீர்மானத்தில், ஹமாஸ் பயங்கரவாதிகளால் முதலில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிணைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானத்தில் மாற்றம் கொண்டுவர அமெரிக்கா ஆதரவுடன் கனடா முயற்சித்தது. ஆனால், இந்த மாற்றம் நிராகரிக்கப்பட்டது. இதை அமெரிக்கா வன்மையாக கண்டித்ததோடு, தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தது. அதேபோல, 14 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

எனினும், தீர்மானத்தை ஆதரித்து 120 நாடுகள் வாக்களித்தன. 45 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. அதன்படி, இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. இது குறித்து ஐ.நா. பொதுச் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜனா படேல் கூறுகையில். “கடந்த அக்டோபர் 7-ம் தேதியன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் அதிர்ச்சி அளித்தன. அவை கண்டனத்துக்குரியவை.

பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம். அவர்களை உடனடியாக நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்க வலியுறுத்துகிறோம். பயங்ரவாதம் வேகமாகப் பரவக் கூடியது. அதற்கு எல்லைகள் இல்லை. தேச பேதங்கள் இல்லை. இனவேறுபாடுகளும் இல்லை. ஆகவே, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உலகம் எந்தவித நியாயங்களையும் கற்பிக்கக் கூடாது. வேற்றுமைகளை விலக்கிவைப்போம். ஒன்றுபட்டு பயங்கரவாதத்துக்கு எதிரான முறைகளைக் கையாள்வோம்.

அதேசமயம், மனிதாபிமான சிக்கல்கள் கவனிக்கப்பட வேண்டும். காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்யும் பொருட்டு சர்வதேச சமூகம் எடுத்துவரும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அதற்கு இந்தியாவும் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளது.

போரில் ஈடுபட்டுள்ள இருதரப்புகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க வன்முறையை விடுத்து ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம். ஐ.நா. பொதுச் சபை பயங்கரவாதம், வன்முறைக்கு எதிராக அழுத்தமான செய்தியைக் கடத்தும் என்று நம்புகிறோம்” என்று கூறினார். ஆனால் 120 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததால், இத்தீர்மானம் ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டது. போர் முடிவுக்கு வருமா அல்லது தொடர்ந்து பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடருமா என்ற கேள்வி உலகளவில் எழுந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top