உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக நமது பாரதம் திகழும்: பிரதமர் மோடி!

வருகின்ற 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக நமது பாரதம் திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மூன்றாவது உலகளாவிய கடல்சார் இந்தியஉச்சி மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

‘‘உலகின் செல்வாக்கு மிக்க நாடுகளின் வரிசையில் தற்போது மாற்றங்கள் நடந்து வருகிறது. உலக நாடுகள் இந்தியாவை புதிய நம்பிக்கையோடு பார்க்கின்றன. எப்போதெல்லாம் நமது கடல்சார் திறன் வலிமையாக இருந்ததோ அப்போதெல்லாம் நமது நாடும் உலகமும் அதிக பலன் பெற்றுள்ளன. இந்தியாவின் கடல்சார் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதற்கு என்று கொள்கைகள் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் டெல்லியில் நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாட்டில், பாரதம் – மத்திய கிழக்கு – ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் பொருளாதார வழித்தடம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு.

அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக பாரதம் மாற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் புரட்சிகர மாற்றங்களை நாம் கொண்டு வந்த வண்ணம் இருக்கிறோம். அதன்படி வருகின்ற 10 ஆண்டுகளில் கப்பல் கட்டும் துறையில் உலகின் முதல் 5 நாடுகளில் ஒன்றாக பாரதம் திகழும். நமது நாட்டில் தயாரிப்போம்; உலகத்துக்காக தயாரிப்போம் என்பதே நமது மந்திரம். வரும் காலங்களில் நமது நாட்டின் பல பகுதிகளில் கப்பல் கட்டும் தலங்களும் பழுதுபார்க்கும் தலங்களும் அமைய உள்ளன.’’ இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top