7 நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத ‘வெள்ளை அரிசி’ ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி!

நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா குடியரசு, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய 7 நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டில் விலை உயர்வை தடுக்கும் வகையிலும், உள்நாட்டு மக்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையிலும், கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

குறைந்தபட்ச வரி விதிப்பின் மூலம் அரிசி ஏற்றுமதியை தடுக்க முடியும் என்று மத்திய அரசு கருதியது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு 20 சதவீத வரி விதிப்பு செய்தது. அப்போது இந்த வரி விதிப்பு அக்டோபர் 16-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டது. அதன் பின்னர் திடீரென கடந்த வாரம் 2024 மார்ச் 31-ம் தேதிவரை இந்த வரி விதிப்பு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது.

இதன் பிறகு, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை தங்கள் நாட்டுக்கு வழங்குமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில் மேற்கண்ட இரு நாடுகளுக்கு மட்டும் வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

மேலும் ஏற்றுமதிக் கொள்கையில் திருத்தம் செய்யும்போது மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் வழங்கிய அனுமதியின் அடிப்படையிலும், அவர்களின் அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நேபாளம், பங்களாதேஷ், சீனா, கோட் டி ஐவரி, டோகோ, செனகல், கினியா, வியட்நாம், ஜிபூட்டி, மடகாஸ்கர், கேமரூன் சோமாலியா, மலேசியா பிலிப்பைன்ஸ் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகள் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை வழங்கும்படி கேட்டுக் கொண்டன.

இதைத் தொடர்ந்து, நேபாளம், கேமரூன், கோட் டி ஐவரி, கினியா குடியரசு, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய 7 நாடுகளுக்கு வெள்ளை அரிசியை மனிதாபமான அடிப்படையில் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சர்வ தேச நாடுகளின் பசியை போக்குவதில் இந்தியாவின் பங்கை உலக நாடுகள் போற்றுகின்றன. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top