விழிஞ்ஞம் துறைமுகம்: அதானியைப் பாராட்டிய கேரள முதல்வர் பினராயி விஜயன்!

கேரள மாநிலம், விழிஞ்ஞத்தில் அதானி குழுமத்தால் ரூ.7,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வர்த்தக துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. இத்துறைமுகம் அமைத்த அதானி குழுமத்தை முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புதிய துறைமுகத்தில் முதல் கப்பலாக சீனாவில் இருந்து ஷென் ஹுவா-15 என்ற கப்பல் நேற்று (அக்டோபர் 17) மாலை வந்தடைந்தது. அந்த கப்பலை வரவேற்கும் விதமாக விழிஞ்ஞம் துறைமுகத்தில் விழா நடைபெற்றது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் பச்சைக் கொடி அசைத்து கப்பலை வரவேற்றார். செண்டை மேளம் முழங்க, வண்ண பலூன்களைப் பறக்கவிட்டும் கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முரளீதரன், மற்றும் மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எதிர்கட்சித்தலைவர், அதானி துறைமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இது பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டு சாதனையில் ஒன்று எனவும். மத்திய அரசு நாட்டின் அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தி வருவதாகவும் மத்திய அமைச்சர் முரளீதரன் பேசினார்.

இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், ‘‘மன நிறைவான மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் நாம் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளோம். கேரளாவைப் பொறுத்தமட்டில் ‘சாத்தியம் இல்லை’ என்கிற ஒரு வார்த்தையே இல்லை.

இப்போது வந்துள்ளதுபோன்று இனியும் எட்டு கப்பல்கள் வர உள்ளதாக அதானி துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். சர்வதேச துறைமுகமான விழிஞ்ஞம் துறைமுகம் உலக அளவில் முக்கிய இடம்பெறும்.

வழக்கமாக இதுபோன்ற வளர்ச்சித்திட்டம் உருவாகும்போது சில எதிர்ப்புகள் ஏற்படும். இது நம் தேசத்தின் வளர்ந்துவரும் திட்டமாகும். அப்படி வளர்ச்சி வரும்போது சில சர்வதேச சக்திகள் அதற்கு எதிராக செயல்படுவார்கள். இந்தத் துறைமுகத்தின் விஷயத்திலும் அதுபோன்ற சக்திகள் செயல்பட்டது உண்மையாகும்.

வணிக ரீதியாக சிலருக்குப் பிடிக்காததால் அவர்களும் எதிராக செயல்பட்டனர் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அதையும் தாண்டி நாம் முன்னேற முடியும். கேரளம் இந்தியாவுக்கு வழங்கும் மதிப்பு மிக்கபரிசுகளிள் ஒன்று இந்த துறைமுகம். இது நம் நாட்டுக்குப் பெருமையான நிமிடமாகும். நம் நாட்டில் நிறைய துறைமுகங்கள் உண்டு.

மற்ற துறைமுகங்களில் இல்லாத பல விஷயங்கள் விழிஞ்ஞம் துறைமுகத்தில் உள்ளன. சர்வதேச கடல் பாதையில் இருந்து 11 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அமைந்துள்ளது இத்துறைமுகம். முக்கிய கடல் பாதைக்கு இவ்வளவு அருகில் உள்ள மற்ற எந்த துறைமுகமும் நம் நாட்டில் இல்லை.

இந்தத் துறைமுகத்தில் 20 மீட்டர் ஆழம் இயற்கையாகவே அமைந்துள்ளது. இவை எல்லாம் இந்த துறைமுகத்துக்கு கிடைத்துள்ள அபூர்வமான சிறப்புகளாகும்.

ஓர் ஆண்டுக்கு 10 லட்சம் கண்டெய்னர்கள் கையாளும் வகையில் இந்த துறைமுகம் அமைய உள்ளது. மொத்தம் 3 கிலோ மீட்டர் நீளத்தில் கடலில் அலைதடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பணையில் அலைதடுப்பு கோர்லாக் கட்டைகள் 2021-ல் 650 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

பல கட்ட ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி அந்த பணியைத் துரிதப்படுத்தினோம். கடந்த ஏப்ரல் மாதம் 2960 மீட்டர் தூரம் பணிகள் முடிந்துவிட்டன.

விழிஞ்ஞம் முதல் பாலராமபுரம் வரை 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்க ரயில் பாதை அமைக்க முழு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 6000 கோடியில் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்பு சாலை ஏற்படுத்தவும் நடவடிக்கை ஏடுக்கப்பட்டுள்ளது.

இந்த துறைமுகத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய அதானி குழுமம் எடுத்த முயற்சியைப் பாராட்டுகிறோம். மீன்பிடி தொழிலாளர்களின் பிரச்னையைக் கருத்தில் கொண்டு அவர்களின் மறுவாழ்வுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. அரசு நிதியும், அதானி கம்பெனியின் சி.எஸ்.ஆர் நிதியும் மீனவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

விழிஞ்ஞம் துறைமுகம் மூலம் 5000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் சம்பந்தப்பட்ட வேலைக்கான பயிற்சி அளிக்கும் நிறுவனமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கண்டெய்னர் பிசினஸ், தொழில் துறை, உற்பத்தி துறை, போக்குவரத்து, சுற்றுலா என கேரள மாநில வளர்ச்சிக்கும் விழிஞ்ஞம் துறைமுகத் திட்டம் காரணமாக அமையும் என நம்புகிறோம்.

துறைமுக பணிகள் முழுமையாக பூர்த்திசெய்யப்பட்டதும் இவை அனைத்தும் சாத்தியமாகும். உற்பத்தித்துறை, தொழில் துறையில் நிறைந்த மனதுடன் முதலீடு செய்ய பலரும் முன்வர வேண்டும்’’ என்றார்.

எப்போதும் கார்ப்பரேட் கம்பெனி என அதானி குழுமத்தை குற்றம்சாட்டி வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் தற்போது பாராட்டியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் அதானி குழுமம் துறைமுகத்தை அமைத்து வருகிறது. அதற்கும் சில கட்சிகளின் தூண்டுதலால் எதிர்ப்பு தெரிவித்து வருவதை நாம் பார்க்கிறோம். ஒரு நாடு முன்னேறுவதற்குதான் துறைமுகம் அமைக்கப்படுகிறது. அதனை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படையாகவே கேரள முதல்வரின் பாராட்டில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top