ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழக ஆதீனங்களுக்கு அழைப்பு!

உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் மிகப்பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வரும்  கோவில் கட்டுமானப் பணிகள் நிறைவடைய உள்ளது. இதன் திறப்பு விழா அடுத்த ஆண்டு ஜனவரியில்  நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க தமிழக ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

500 ஆண்டு காலம் நிலவி வந்த சர்ச்சைக்கு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அமர்வு ஒரு மனதாக தீர்ப்பளித்து முற்றுப்புள்ளி வைத்தது. ராமர் பிறந்த இடம் ராமருக்கே சொந்தம்  என்றது அந்தத் தீர்ப்பு. 

அதன் அடிப்படையில் நத்தை வேகத்தில் இருந்து கட்டுமானப் பணி துரித வேகம் எடுத்தது. இதனைத் தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.  கோவில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், 5 கோபுரங்கள், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது.

கோவில் கட்டுமானப் பணிகளுக்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கி புதிய நன்கொடை வசூலை துவங்கி வைத்தார். அதே போன்று நாடு முழுவதும் 5.25 லட்சம் கிராமங்களில் பொது மக்கள் நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளனர். தொழிலதிபர்கள், ஆன்மீகவாதிகள் என பலரும் தங்களால் முடிந்த நன்கொடையை வழங்கி வந்தனர்.

கோவில் கட்டுமானத்தை ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்தில் பணியாற்றிய நிருபேந்திர மிஸ்ரா, கட்டுமானப் பணிக்குழு தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இதனால் ஜனவரி மாதம் 15 ஆ-ம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை, ராமர் கோவிலில் பல்வேறு முக்கிய யாகங்கள் நடைபெறுகிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள மடாதிபதிகள், ஆதினங்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைவருக்கும் முறையாக கடிதம் அனுப்பட்டுள்ளது.

விரைவில் தமிழகம் வரும் நிருபேந்திர மிஸ்ரா, மடாதிபதிகள், ஆதினங்களை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார். இதனால், நாடாளுமன்ற திறப்பு விழாவைப் போன்றே, ராமர் கோயில் திறப்பு விழாவிலும் தமிழகத்தைச் சேர்ந்த மடாதிபதிகள், ஆதினங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top