இந்தியா, இலங்கை இடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து!

நாகை-, இலங்கை இடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் தீ விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது. நாகை- இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இதற்காக மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 கோடி நிதியில் நாகை துறைமுகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக செரியாபானி என்ற கப்பல் கொச்சியில் இருந்து நாகைக்கு கொண்டு வரப்பட்டு கடந்த அக்டோபர் 8, 9-ம் தேதிகளில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

பிரதமர் தொடங்கி வைத்த கப்பல் போக்குவரத்து:

பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த (அக்டோபர் 14) சனிக்கிழமை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் காணொளிக் காட்சி வழியாக உரையாற்றினர்.

அதே போன்று நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் கொடியசைத்து கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ‘‘இரு நாடுகளுக்கு இடையேயான நமது உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல். இரு நாடுகளுக்கிடையேயான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளோம்’’. இதன் மூலம் இருநாட்டு கலாசாரம், தொழில் வர்த்தகம் மேம்படும்.

இந்தியாவும் இலங்கையும் கலாசாரம், வர்த்தகம் மற்றும் நாகரீகத்தின் ஆழமான வரலாற்றைப் பதிவை கொண்டுள்ளவை. “நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் நீண்ட காலமாக இலங்கை உள்பட பல நாடுகளுடன் கடல் வணிகத்திற்கு பெயர் பெற்றவை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பூம்புகார் துறைமுகம் நமது இலக்கியங்களில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘சுப்ரமணிய பாரதியாரின் ‘சிந்து நதியின் மிசை’ பாடலில், பட்டினப்பாலை, மணிமேகலை முதலிய சங்க இலக்கியத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கடல்வழி போக்குவரத்து இருந்ததற்கான சான்றுகள் உள்ளது. இந்த படகு சேவை அந்த வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளை உயிர்ப்பித்திருக்கிறது,’’ என்றார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டாண்மையின் மையக் கருப்பொருள் இணைப்பு என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, ‘‘அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்தியா பயணத்தின் போது, நமது பொருளாதாரப் பங்காளித்துவத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை கூட்டாக ஏற்றுக் கொண்டோம். இணைப்பு என்பது இரண்டு நகரங்களைக் கொண்டு வருவது மட்டுமல்ல. மேலும் இது நமது நாடுகளை நெருக்கமாக்குவது, நமது மக்களை நெருக்கமாக்குவது மற்றும் நமது இதயங்களை நெருக்கமாக்குவது. இணைப்பு வர்த்தகம், சுற்றுலா மற்றும் -மக்கள் உறவுகளை மேம்படுத்துகிறது. இது இரு நாட்டு இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.’’ கடந்த 2015 முதல் இரு நாடுகளுக்கும் இடையே போக்குவரத்து இணைப்பில் மேம்பட்ட ஒத்துழைப்பு இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

2015 இல் நான் இலங்கைக்கு பயணம் செய்ததைத் தொடர்ந்து, டெல்லிக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது. பின்னர் இலங்கையிலிருந்து குஷிநகரில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியதைக் கொண்டாடினோம். 2019 இல் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் நேரடி விமான சேவை தொடங்கியது. தற்போது, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மற்றொரு முக்கியமான படியாகும்,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மகிழ்ச்சியுடன் சென்ற பயணிகள்:

கப்பலில் முன்பதிவு செய்த 50 பயணிகளின் உடமைகள் மற்றும் கடவுச்சீட்டுகளை சோதனை செய்த அதிகாரிகள் அவர்களை கப்பலுக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து பயணிகள் மகிழ்ச்சியுடன் கடல் வழி பயணத்தை தொடங்கினார்கள்.

நாகை துறைமுகத்தில் இமிகிரேஷன், சுங்கத்துறை, பயணிகள் சோதனைக் கருவி, மருத்துவ பரிசோதனை, பயணிகள் கொண்டு வரும் உடைமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வது என அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், துறைமுகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் பின்பற்றப்படும் அனைத்துப் பாதுகாப்பு நடைமுறைகளும் நாகை துறைமுகத்தில் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்தியா – இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மூலமாக தமிழக மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள். இந்தக் கப்பல் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான மக்கள் தொடர்பினையும், நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது.

இந்தப் பயணம், கடலில் உள்ள இயற்கை சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் நிலையில் நல்லமுறையில் அமையும். இதன் மூலம் இந்தியா – இலங்கை இடையே கலாசார உறவு மற்றும் வர்த்தகம் பெருகும் வாய்ப்பு உள்ளது. குறைந்த செலவிலான இந்தப் பயணத்தின் மூலம் இருநாட்டு மக்களும் விரைவாக பயணிக்க முடியும். இதனால் சுற்றுலாத்துறையும் நன்று வளர்ச்சியடையும்.

பிரதமரின் தொலைநோக்கு மற்றும் சிறப்புக் கவனம் மற்றும் ஒத்துழைப்பால் இந்த கப்பல் போக்குவரத்து சாத்தியமானது. இதனால் அனைத்து தரப்பு முன்னேற்றங்களும் இருநாடுகளுக்கும் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கப்பல் கட்டண விபரம்:

நாகையிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்ல ரூ.7,670 கட்டணமாகும். தொடக்க விழா அன்று ஒரு நாள் மட்டும் கட்டணச் சலுகையாக, இலங்கை செல்லும் பயணிகளுக்கு (சிங்கிள் ட்ரிப்) டிக்கெட் விலை ரூ.3 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இலங்கையில் இருந்து நாகைக்கு வர வழக்கம்போல ரூ.7,670 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் தினமும் தலா ஒருமுறை இயக்கப்படும். இந்தக் கப்பல் பயணத்தின்போது பயணிகள் அதிகபட்சம் 52 கிலோ எடை கொண்ட உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும்.

இந்தப் பயணிகள் கப்பல் அன்றாடம் காலை 7 மணிக்கு நாகையில் இருந்து புறப்படும். பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன்துரை துறைமுகத்தைச் சென்றடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும்.

பயணிகளின் வருகை குறைவாக உள்ள காரணத்தினால் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் என்று 3 நாட்கள் மட்டும் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் சமயத்தில் கூடுதலான நாட்களில் கப்பல் சேவை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top