இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க ‘‘ஆபரேஷன் அஜய்’’: மத்திய அரசு அதிரடி!

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் எல்லை பகுதியிலும் புகுந்து அந்தப் பகுதியில் இருந்த மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் போர்  அறிவிப்பு செய்தது.

அதன்படி ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.  இதுவரை இந்த தாக்குதல்களில் 2000 பேருக்கு மேல் பலியானதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு உலக நாடுகள் பல ஆதரவு தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிலவரம் குறித்து பேசினார். இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள் உள்ளனர். இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும், வெளியுறவு துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் மூலம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது பற்றி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது சமூக வலைத் தளத்தில் கூறியிருப்பதாவது:

‘‘இஸ்ரேலில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் அஜய் தொடங்கப்படுகிறது. அவர்களுக்காக சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள எங்கள் நாட்டினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேலில் இருந்து இந்தியா செல்வதற்காக பதிவு செய்துள்ள இந்தியர்கள், நாளை முதல் சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top