விடியல் அரசை கண்டித்து கோட்டையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது!

விடியல் அரசை கண்டித்து சென்னையில் உள்ள கோட்டையை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை கைது செய்து குண்டுக்கட்டாக போலீசார் அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப் பாதுகாப்பு, கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி, கடன் தள்ளுபடி, இலவச மின்சாரத்திற்கு சட்ட பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று (அக்டோபர் 10) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கரும்பு, நெல், மஞ்சள் உள்ளிட்ட விதை பொருட்களை கைகளில் ஏந்தியபடி வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து கோட்டையை முற்றுகையிட விவசாயிகள் புறப்பட்டனர். அவர்களை முன்னேற விடாமல் போலீசார் தடுத்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். பின்னர் அவர்களை ஒரு மண்டபத்தில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் விவசாயிகள் சிலர் கூறியதாவது: எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின், விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்களுக்கு பதிலாக புதைவடம் வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படும் என வாக்குறுதி அளித்தார்.

ஆனால், கரூர் மாவட்டம் முழுதும் உயர்மின் கோபுரங்களை அமைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. எங்களின் நிலங்களையும் பறிக்க பார்க்கிறது இந்த விடியா அரசு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆசிரியர்கள் கைது, நர்சுகள் கைது,  விவசாயிகள் கைது, போக்குவரத்து தொழிலாளர் போராட்டம், மின் வாரியத் தொழிலாளர் போராட்டம், தொழிற்சாலை உரிமையாளர்கள் போராட்டம் என ” எந்தக் கொம்பனும் கேள்வி கேட்க முடியாத ” திராவிட ஆட்சியை ஒவ்வொரு துறையினரும் கேள்வி கேட்டு வருவது அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.எனவே, போராட்டங்களை ஜனநாயக விரோத அடக்குமுறையை பயன்படுத்தி நசுக்கி வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் இந்த ஆட்சி நசுக்கப்படும் என்கிறார்கள் பாதிக்கப்பட மக்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top