கரூர்: மணல் குவாரிகளில் மீண்டும் அதிரடி சோதனை!

கரூர் மாவட்டத்தில் இரண்டு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கனிம வளங்கள் அதிகளவு சட்டத்திற்கு புறம்பாக வெட்டி எடுக்கப்பட்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக  கடத்தப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகம் வெட்டி எடுப்பது,  தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய வரியை காட்டாமல்  ஏமாற்றுவது என மணல் மாஃப்பியாக்கள் அரசை ஏமாற்றி பல நூறு கோடிகள் கொள்ளையடிக்கின்றனர்.  

இந்தப் புகார்களின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மணல் கடத்தல், மணல் குவாரிகளில் முறைகேடு உள்ளிட்ட வழக்குகளின் அடிப்படையில் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன் மற்றும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர் வெங்கடேஷ் உள்ளிட்டோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியான சோதனை மேற்கொண்டனர்.

மணல் குவாரி அதிபர்களுக்கு தொடர்புடைய சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் சென்னையில் உள்ள கனிமவளத்து உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத ரூ.15 கோடி ரொக்கப் பணம், ஒரு கிலோ தங்கம் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை அறிந்து கொண்ட மணல் குவாரி அதிபர்களான ரத்தினம், கரிகாலன், ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேரும் தலைமறைவானார்கள்.

மணல் குவாரி அதிபர்கள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர் என்றும், இவர்களுக்கு இடையே வரவு, செலவு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையொட்டியே இந்த சோதனை நடைபெற்றது. ஏற்கனவே பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கரூரில் 2 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 10) மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், மல்லம்பாளையம், நன்னியூர் பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆறு வாகனங்கள் மற்றும் 1 டெம்போ டிராவலர் வாகனத்தில் வந்த 20 -க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடுமையான வெயில் சுட்டெரித்து வருவதால் ஆற்றுப்படுகையில் குடை பிடித்தபடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு நாளை (அக்டோபர் 11) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த சோதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. மணல் குவாரி முறைகேடுகளிலும் செந்தில் பாலாஜி ஈடுபட்டிருப்பதற்கான தடயங்கள் அமலாக்கத் துறைக்குக் கிடைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது. நேரடியாக மற்றும்  மறைமுகமாக மணல் குவாரி அதிபர்களுக்கு உதவி அதன் மூலம் செந்தில்பாலாஜி  நிதி பெற்று பெரும் பலன் அடைந்திருக்கிறார்  எனக் கூறப்படுகிறது! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top