மின்கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

திமுக அரசு உயர்த்திய மின்கட்டண உயர்வை கண்டிக்கின்ற வகையில் தமிழகம் முழுவதும்  சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. 

கோவை இடையர்பாளையம், கணபதிகுறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் கிரைண்டர், மிக்சி உதிரி பாகங்கள், வாகன உதிரிபாகங்கள் உள்பட பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கக்கூடிய 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த தொழிற்சாலைகளில் இருந்து தயாராகும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல இன்னல்களை தொழில் துறையினர் சந்தித்து வருகின்றனர். இதில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளதால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை மாவட்ட தொழில்துறையினர் தொடர்ந்து பல்வேறு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. கோவை இடையர்பாளையம், கணபதிகுறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அனைத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது.

மேலும் கோவை மாவட்ட தொழில் முனைவோர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தபடி ஊர்வலமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு ஆட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்களிலும் இன்று கருப்பு கொடியேற்றப்பட்டு போராட்டம் நடந்தது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பால் விலை, மின்சாரக்கட்டணம், பேருந்துக்கட்டணம், சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவையை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனால் பொது மக்கள் மிகப்பெரிய துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டனர். 

தொழில்களுக்கு உதவுவதற்கு பதிலாக, மின்சாரக் கட்டணங்களை பல மடங்காக உயர்த்தி தொழிற்சாலைகளை மூடும் அளவிற்கு  விடியா அரசு செயல்பட்டு வருகிறதே ஏன், என்று கேள்வி எழுப்பப்படுகிறது. தொழிலகங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வரும் திமுகவிற்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும் என கோவை மக்கள் கருத்துக்  கூறி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top