ஆதின  நிலம் அபகரிப்பு:  திமுக அரசை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம்: தருமபுரம் ஆதீனம்!

தருமபுர ஆதீனம் சார்பில் மயிலாடுதுறையில் தொடக்கப்பட்ட சண்முகதேசிகசுவாமிகள் இலவச மருத்துவமனையை இடித்தால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் தனது  தெரிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மயிலாடுதுறையில், மயூரநாதர் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச பிரசவ மருத்துவமனை உள்ளது. இந்த இலவச மருத்துவமனை 1943 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனத்தின் 24-வது மடாதிபதியாக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் பிரசவத்தில் இறந்து போன அவரது தாயாரின் நினைவாக ஆதினத்திற்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் பிரசவ மருத்துவமனையை கட்டினார்.

அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் சர் ஆதர் ஜேம்ஸ் ஹோப் என்பவர் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். எட்டு ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமான பணி நிறைவடைந்து 1951 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி ராஜா மருத்துவமனையை திறந்து வைத்தார்.

நகரின் மிகப்பெரிய நிலப்பரப்பில் விஸ்தாரமாக இருந்த மருத்துவமனை, சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் பிரசவ மருத்துவமனையாக விளங்கி வந்தது. இந்த மருத்துவமனை தருமபுரம் மடத்தின் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்ல நிலைமையில் இயங்கி வந்த மருத்துவமனை, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நகராட்சியின் பராமரிப்பின்மை காரணமாக பழுதடைந்து குப்பை மேடாக மாறிப் போனதாக மயிலாடுதுறை மக்கள் புகார் தெரிவித்தனர்.

மருத்துவமனைக்காக ஒப்படைக்கப்பட்ட நிலம் தவறாக பயன்படுத்தப்படுவதை அறிந்து, 
இலவச மருத்துவமனை அமைந்துள்ள இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும், மீண்டும் இலவச மருத்துவமனை அமைக்கப் போவதாக தற்போதைய தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யா சுவாமிகள் கோரிக்கை விடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு திமுக அரசிடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில், அருகில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் இடத்தை விரிவு செய்ய,  நகராட்சி நிர்வாகம் இலவச மருத்துவமனையை இடித்துவிட்டு அங்கே குப்பைக் கிடங்கு அமைக்கப் போவதாக செய்திகள் வெளியானது.

இந்த தகவலை அறிந்த தருமபுரம் ஆதீன குரு மகா சன்னிதானம் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  

இந்த நிலையில், இது தொடர்பாக ஆதீன குரு மகா சன்னிதானம் விடுத்திருக்கும் அறிக்கையில், இலவச மருத்துவமனையை இடிக்க போவதாக செய்தி வந்துள்ளது. அப்படி ஒரு நிகழ்வு ஏற்படுமாயின் நம் முன்னோர்கள் அமைத்த நினைவு அமைப்பினை காக்க சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த தகவலை கேள்விப்பட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். தாய்மார்களுக்காக இலவசமாக கட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவமனையை இடித்துவிட்டு குப்பை கொட்டும் இடமாக திமுக அரசு மாற்றத்துடிப்பது ஏன் என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர். இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் மிகப்பெரிய போராட்டத்தை பொதுமக்கள் முன்னெடுக்கவும் தயார் என சமூக ஊடகங்களை ஆன்மீக அன்பர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, தருமபுரம் ஆதீனத்தின் நியாயமான போராட்டத்திற்கு முழுமையாக உடன் இருப்போம் என ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top