புழல் சிறையில் இருந்து கொண்டே தீவிரவாத சதி செயல்? 3 ஆண்டுகளாக வீடியோ கால் பேசிய போலீஸ் பக்ருதீன்!

பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி போலீஸ் பக்ருதின், பயங்கரவாத அமைப்புகளுக்கு வீடியோ கால் மற்றும் மெசேஜ் உள்ளிட்ட பல வழிகளில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை, கொள்ளை, பயங்கரவாத செயல் என்று பல குற்ற வழக்குகளில் சிக்கி பல ஆயிரக்கணக்கான கைதிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்படி பல்வேறு பிரிவுகளின் புழல் சிறை பிரிக்கப்பட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி வருகையின்போது பைப் வெடிகுண்டு வைத்தது, மற்றும் வேலூரில் இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகி சேலம் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டோரின் கொலை தொடர்பாக பயங்கரவாதிகள் போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் போலீஸ் பக்ரூதீன் கடந்த 3 ஆண்டுகளாக புழல் சிறையில் செல்போன் உபயோகித்து அதன் மூலம் வாட்ஸ்அப்பில் வீடியோ கால் பேசியதாக தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சரவணன் குற்ற வழக்குகளில் சிக்கி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது பயங்கரவாதி போலீஸ் பக்ரூதீனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெளியில் சென்ற சரவணன் மூலமாக போலீஸ் பக்ரூதீன் பல சதி திட்டங்களை செயல்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதற்காக சட்ட விரோத பணப்பறிமாற்றம் தொடர்பில் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரது செல்போனை ஆய்வு செய்த போது சிறையில் உள்ள போலீஸ், பக்ரூதீனிடம் பேசியது அம்பலமாகியுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ரூதீன் எப்படி செல்போனை பயன்படுத்தி வாட்ஸ்அப் கால் மூலமாக வெளியுலகத்தில் பேசி வந்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் பின்னணியில் பயங்கரமான சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை தமிழக போலீஸ் விசாரிப்பதை விட என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி குற்றத்தில் ஈடுபட்ட காவல்துறை உள்ளிட்டோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

-வ.தங்கவேல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top